கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: ரோப்வே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்

கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு: ரோப்வே திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்

உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரார்த்தனை செய்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி, தற்போது நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக, இந்திய விமானப்படை விமானத்தில் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரதமரை, ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் அஜய் பட் ஆகியோர் வரவேற்றனர்.

இன்று காலையில் கேதார்நாத் கோவிலில் பூஜை செய்த பின்னர், 9.7 கிமீ கௌரிகுண்ட்-கேதார்நாத் ரோப்வே திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் மூலமாக கௌரிகுண்டில் இருந்து கேதார்நாத் கோவிலுக்கு 30 நிமிடங்களில் ரோப்வே மூலம் பக்தர்கள் செல்ல முடியும்.

"ஸ்வஸ்திகா" சின்னம் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட மலைவாழ் மக்களின் வெள்ளை நிற பாரம்பரிய உடையில் பிரதம மந்திரி கேதார்நாத் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் பூஜை செய்த அர்ச்சகர்கள், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பிரதமருக்கு பலம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். மேலும் இவர் இன்று பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல உள்ளார்.

இன்று பிற்பகலில், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களுக்கான ₹ 3,400 கோடி மதிப்பிலான சாலை மற்றும் ரோப்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மானா கிராமத்தில் ஒரு கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி இரண்டு புகழ்பெற்ற மலைக்கோயில்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு கோவில்களும் குவிண்டால் கணக்கிலான மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in