மீண்டும் மிரட்டும் கரோனா: பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!

பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்

சீனாவை மிரட்டி வரும் கொரோனாவின் ஓமைக்ரான் பிஎஃப்.7 பாதிப்பு இந்தியாவிலும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் இந்தியாவின் தற்போதைய கோவிட் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

சீனாவை மிரட்டி வரும் BF.7 ஒமைக்ரான் திரிபால் குஜராத் மாநிலத்தில் 2 பேரும் மற்றும் ஒடிசாவில் 2 பேரும் பாதித்துள்ளனர். இவர்கள் ஜூலை, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாதிக்கப்பட்டனர். குஜராத்தில் இரு நோயாளிகளும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி, தற்போது நாட்டில் 10 கோவிட் வகை பாதிப்புகள் பதிவாகி வருகின்றன, இதில் சமீபத்தியது BF.7 வகை தொற்று ஆகும்.

சீனாவில் கோவிட் பாதிப்புகள் மிக வேகமாக அதிகரித்து வருவதால் உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, முகக்கவசம் மற்றும் சானிடைசர் போன்ற நடைமுறைகளை பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் தற்போது நாட்டில் எந்த கரோனா கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இல்லை. இந்தியாவில் பல்வேறு விமான நிலையங்களில் இனி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் கோவிட்டுக்கான தோராயமான சோதனைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் பிஎஃப்.7 பாதிப்புகள் தொடர்பான கடுமையான நெறிமுறைகளை தயார் செய்து வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in