பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை: பள்ளி முதல்வர், 2 ஆசிரியர்கள் மீது வழக்கு

கவின்குமார்.
கவின்குமார்.

சென்னையில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக அவர் படித்த பள்ளியின் முதல்வர், 2 ஆசிரியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை நீலாங்கரை சிங்காரவேலன் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கவின்குமார்(17), தர்ஷன்(14) என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் கொட்டிவாக்த்தில் உள்ள நெல்லைநாடார் பள்ளியில் பிளஸ் 2 மற்றும் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.

கவின்குமார் படித்த பள்ளி.
கவின்குமார் படித்த பள்ளி.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் குளியலறையில் குளிக்கச் சென்ற கவின்குமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பாரத்த போது கவின்குமார் தூக்கிட்ட நிலையில் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற நீலாங்கரை போலீஸார், கவின் குமாரின் உடலை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கடந்த வாரம் மகேஷின் இளையமகன் தர்ஷன் பள்ளியில் அமர்ந்திருந்த போது, ஆசிரியர் செல்லப்பாண்டி எதற்காக இங்கு அமர்ந்துள்ளாய் எனக் கேட்டுள்ளார். தேர்வு முடித்து விட்டு அமர்ந்துள்ளதாக தர்ஷன் பதிலளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தர்ஷனை திட்டியுள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் தர்ஷன் கூறியுள்ளார். இதனால் அவரது தந்தை மகேஷ், பள்ளி முதல்வரிடம் ஆசிரியர் செல்லப்பாண்டி மீது புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 29,30-ம் தேதிகளில் உடல்நலக்குறைவால் மாணவர் கவின்குமார் பள்ளி செல்லவில்லை. நேற்று வழக்கம் போல பள்ளி சென்றுள்ளார். அப்போது கவின்குமாரை உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் சக மாணவர்கள் முன்பு அடித்துள்ளார். அப்போது அங்கு வந்த முதல்வர் மற்றும் ஆசிரியர் செல்லபாண்டி இருவரும் சேர்ந்து கவின்குமாரிடம் பாத்ரூமில் பாக்கு(ஹான்ஸ்) வைத்து நீதானே எனக் கேட்டுள்ளனர். அதற்கு கவின்குமார், நான் வைக்கவில்லை என கூறியுள்ளார். ஆனால், நீதான் வைத்தாய் என எழுதிக்கொடு எனக்கேட்டு வலுக்கட்டாயமாக அவரிடம் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கி கொண்டதுடன், உன் அப்பாவிடம் சொன்னால் பயந்துவிடுவோமா என மிரட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவன் கவின்குமார் வீட்டிற்கு வந்தவுடன், பள்ளியில் நடந்தவற்றை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இனி பள்ளிக்கு செல்லமாட்டேன், எனக்கு அசிங்கமாக உள்ளது என தெரிவித்துள்ளார். அவரை பெற்றோர் சமாதானம் செய்துள்ளனர். இன்று காலை பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து பள்ளி முதல்வர், ஆசிரியர் செல்லப்பாண்டி, உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in