10 நாட்கள் மட்டுமே வேலை; 20 நாட்கள் கட்டாய விடுமுறை: கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்

கோவையில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் அவலம்
10 நாட்கள் மட்டுமே வேலை; 20 நாட்கள் கட்டாய விடுமுறை: கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 70 சதவீதம் உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதால் மாதம் 20 நாட்கள் வரை கட்டாய விடுமுறை விடும் நிலை உருவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில்நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில் நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.

கரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த தொழில்நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி இருந்தன. அதற்கு பின்பு மெல்ல மெல்ல எழ தொடங்கின. ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, ஜிஎஸ்டி பிடித்தம், வங்கி கடன் கெடுபிடி உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தையில் மந்த நிலை, போதுமான ஆர்டர்கள் கிடைக்காதது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். உலக அளவிலும், இந்தியா அளவிலும் புகழ் பெற்ற கோவை பம்பு செட் மற்றும் உதிரிபாகங்கள் நிறுவனங்கள் தற்போதைய சூழ்நிலையில் 70 சதவீதம் உற்பத்தியை குறைத்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறுகையில், "கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், தயாரிக்கும் நிறுவனங்கள் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக கோவை உள்ளது. சுமார் 70 ஆண்டு கால பாரம்பரியமும் கோவையில் உள்ள பம்புசெட் நிறுவனங்களுக்கு உள்ளது. உலக அளவில் கோவை பம்பு செட்கள் பெயர் பெற்றுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் பெரிய நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் உள்ளன. இதில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர்.

கரோனா பாதிப்பை காட்டிலும் மூலப்பொருள் விலை ஏற்றம், ஒன்றிய, மாநில அரசுகளின் கெடுபிடிகள் போன்றவற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லையால் வங்கிகளுக்கு பயப்பட வேண்டிய நிலை, ஜிஎஸ்டி அபராதம் பயம், வணிக வரித்துறை கெடுபிடி, என தற்போது தொழில் முனைவோர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதன் காரணமாக பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி 70 சதவீதம் குறைந்துள்ளது. கட்டாய ஆட்கள் குறைப்பு, கட்டாய விடுமுறை போன்றவைகள் நடைபெற்று வருகின்றன" என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில், "குறுந்தொழில் முனைவோர்கள் தங்களது தொழில் நிறுவனங்களை மாதம் 10 நாட்கள் மட்டுமே நடத்த முடியகிறது. மூலப்பொருள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் ஜாப் ஆர்டர்கள் சரிந்தது. 20 நாட்கள் வரை வேலை இல்லாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் அவர்கள் ஹோட்டல் வேலை, கூலிவேலை, விவசாய வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். இதே நிலை நீடித்தால் கோவை தன் அடையாளத்தை இழக்க நேரிடும். மாநில அரசு இச்சமயத்தில் சொத்துவரி, மின்கட்டண உயர்வை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். குறுந்தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in