பதற்றம் தரும் பட்டினிப் பட்டியல்

என்ன செய்ய வேண்டும் இந்தியா?
பதற்றம் தரும் பட்டினிப் பட்டியல்

உலகளாவிய பட்டினிக் குறியீட்டு எண் பட்டியலில், 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்தைப் பெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. பட்டினி விஷயத்தில் நமது அண்டை நாடுகளைவிடவும் நாம் மோசம் எனும் செய்தியும், பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு இணையான இடத்தில் இந்தியா இருக்கிறது எனும் செய்தியும் எளிதில் கடக்க முடியாத கவலைகள். எனினும், அந்த அறிக்கையை மத்திய அரசு புறக்கணிப்பதும், விமர்சித்திருப்பதும்தான் விநோதம்!

அதிகாரபூர்வ தரவுகள்

கன்செர்ன் வேர்ல்டுவைட் எனும் அயர்லாந்து தொண்டு நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃப் நிறுவனமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் உலகளாவிய பட்டினிக் குறியீட்டெண் அறிக்கையை வெளியிடுகின்றன. பட்டினிக் குறியீட்டைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் இடத்தை, ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைகளின் சவலைத்தன்மை, வளர்ச்சிக் குறைபாடு, குழந்தை இறப்பு விகிதம் ஆகிய நான்கு காரணிகள் தீர்மானிக்கின்றன. ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த தரவுகளை ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (எஃப்.ஏ.ஓ) வழங்குகிறது. குழந்தை இறப்பு விகிதம் குறித்த தரவுகளை ஐநாவின் கீழ் இயங்கும் குழந்தை இறப்பு விகித மதிப்பீட்டுக் குழு அளிக்கிறது. வளர்ச்சிக் குறைபாடு, சவலைத்தன்மை குறித்த தரவுகளை யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி போன்ற அதிகாரபூர்வ அமைப்புகள் திரட்டித் தருகின்றன.

இந்தப் பட்டியலில் 9.9 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் ஒப்பீட்டளவில் நல்ல நிலைமையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 10 முதல் 19.9 வரையிலான புள்ளிகளைப் பெறும் நாடுகள் ஓரளவுக்குச் சராசரியான நிலையில் இருப்பவை. 20 முதல் 34.9 வரையிலான புள்ளிகளைப் பெறுபவை மோசமான நிலையில் இருக்கும் தேசங்கள். 35 முதல் 49.9 வரை பெற்றிருப்பவை ஆபத்தான நிலையில் இருக்கும் நாடுகள். 50-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெறும் தேசங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவை. இதில் இந்தியா பெற்றிருப்பது 27.5 புள்ளிகள். ஆம், பட்டினி விஷயத்தில் நாம் மோசமான நிலையில் இருக்கிறோம்!

பரிதாபமான நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நமக்கும் பட்டினி விஷயத்தில் பெரிய வேறுபாடு இல்லை என்பது, அதிர்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி.

அண்டை நாடுகளைவிடவும் மோசம்

இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 92-வது இடத்திலும், இலங்கை, மியான்மர், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் முறையே 65, 71, 76, 76, எனும் இடங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டிருக்கும் இலங்கை, ஜனநாயக ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சியின் கீழ் தத்தளித்துக்கொண்டிருக்கும் மியான்மர் போன்ற நாடுகளைவிடவும் நாம் மோசம் என்பதுதான் நிதர்சனம்.

99-வது இடத்தில் ஜிபூட்டி, லெசோதோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, 100-வது இடமாக அல்லாமல் 101-வது இடத்தில் இந்தியா குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது பப்புவா நியூகினியா. தாலிபான்களின் ஆளுகைக்குட்பட்டு பரிதாபமான நிலையில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் நமக்கும் பட்டினி விஷயத்தில் பெரிய வேறுபாடு இல்லை என்பது, அதிர்ச்சியளிக்கும் இன்னொரு செய்தி.

தொடரும் அவலம்

பட்டினி விஷயத்தில் இந்தியா மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுவது இது முதல் முறையல்ல. 2015-ல் 93-வது இடத்தில் இருந்தது இந்தியா. 2019-ல் இந்தியா 102-வது இடத்துக்கு வந்தபோது, பிரதமர் மோடி உண்ணும் காளானை முன்வைத்து பலரும் பாஜக அரசின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்தனர். ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் காளானை உண்ணும் பிரதமரின் ஆட்சியில் பட்டினி தாண்டவமாடுகிறது என்று கண்டனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு இந்தப் பட்டினிக் குறியீட்டில் 94-வது இடத்தில் (அப்போது மொத்தம் 107 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன) இருந்த இந்தியா இப்போது 101-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது(!). 2019-ல் இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட மோசமான இடத்தில் 13 நாடுகள் இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 15 ஆகியிருக்கிறது. அவ்வளவுதான். ஆனால், நிலைமை மோசம் என்பது மோசம்தானே!

எங்கு தவறுகிறோம்?

இதுபோன்ற அவல நிலையை மாற்ற, ஏழை மக்களின் வருமானத்தையும், வாங்கும் திறனையும் அதிகரிப்பது அவசியம் என்று பல தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன. பள்ளி மதிய உணவிலும், அங்கன்வாடிகளிலும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது எனும் யோசனையைப் பரிசீலிக்கக்கூட பல மாநில அரசுகள் தயங்குகின்றன. ரேஷன் கடைகளில் இருக்கும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பட்டினியில் வாடும் குடும்பங்களும் இருக்கின்றன.

2018-ல் தலைநகர் டெல்லியில் மூன்று குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. ரிக்‌ஷா ஓட்டும் ஏழைத் தந்தையின் மகள்கள் அந்த மூன்று தளிர்கள். மேற்கு வங்கத்திலிருந்து டெல்லி வந்து ரிக்‌ஷா ஓட்டிப் பிழைத்துவந்த அவரிடமிருந்து யாரோ சில விஷமிகள் ரிக்‌ஷாவைப் பறித்துக்கொள்ள, கிடைத்துவந்த சொற்ப வருமானமும் தடைபட்டு, குடும்பம் வறுமையில் வாடியது. வீட்டு வாடகை கொடுக்க முடியாததால், வசித்துவந்த வீட்டிலிருந்தும் அந்தக் குடும்பம் வெளியேற்றப்பட்டது. பசியும் கண்ணீருமாக வாடி இறக்கும்வரை அந்தத் தளிர்களை வெளியுலகம் கண்டுகொள்ளவில்லை. இறந்த பின்னர் ஊடகங்கள் அங்கு படையெடுத்தன.

இது ஓர் உதாரணம்தான். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக்கொள்ளும் பரிதாப ஜீவன்கள் குறித்த செய்திகளை இயல்பாகக் கடந்துவிடுகிறோம். ஊட்டச்சத்து மிக்க மாட்டுக் கறி உண்பதற்கு எதிராக அவ்வப்போது வலதுசாரி அமைப்புகளும் பசுகுண்டர்களும் ஏற்படுத்தியிருக்கும் அச்சுறுத்தல்களையும் கணக்கில் கொண்டாக வேண்டியிருக்கிறது.

இந்தியாவின் எதிர்வினை

சர்வதேச அளவில் வெளியாகும் இதுபோன்ற அறிக்கைகளில் இந்தியாவின் இடம் பலவீனமாக இருக்கும்பட்சத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடியாக எதிர்வினையாற்றத் தவறுவதில்லை. பட்டினிக் குறியீட்டெண் அறிக்கைக்கும் மத்திய அரசிடமிருந்து உடனடி எதிர்வினை வெளியாகிவிட்டது. உணவு மற்றும் விவசாய அமைப்பு பயன்படுத்தியிருக்கும் வழிமுறை அறிவியல்பூர்வமானதல்ல என்பது அரசின் ஆதங்கம். நமது அண்டை நாடுகள் குறித்த தரவுகளின் நம்பகத்தன்மையையும் இந்தியா கேள்விக்குட்படுத்துகிறது. உண்மையில், சவலைத்தன்மை எனும் விஷயத்தில் மிக மோசமான நிலையை இந்தியா அடைந்திருக்கிறது என்றாலும், மற்ற மூன்று காரணிகளில் முந்தைய நிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றே இந்த அறிக்கை சொல்கிறது.

உள்நாட்டுப் பிரச்சினைகள், பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகள் போன்ற பிரச்சினைகளுடன், கரோனா பெருந்தொற்று உருவாக்கியிருக்கும் சுகாதார மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் பல நாடுகளில் பட்டினிக்கு வித்திட்டிருக்கின்றன. கரோனா காலத்தில் கடும் பாதிப்பை இந்தியா சந்தித்திருப்பது கண்கூடு. இந்த நிலையிலும் இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள அரசு மறுப்பதுதான் விநோதம்.

2018-ல் போஷன் அபியான் எனப்படும் தேசிய ஊட்டச்சத்துத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அந்தத் திட்டத்தின் இலக்குகளை எட்டுவதில் போதாமை இருப்பதாக நிதி ஆயோக்கே சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்நிலையில், “உலகளாவிய பட்டினிக் குறியீட்டு எண் அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது; கள யதார்த்தத்துக்கு மாறானது” என்று புலம்புவதைக் கைவிட்டுவிட்டு செயலில் இறங்க வேண்டும் மத்திய அரசு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in