தவறான டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க திட்டம் - மத்திய அரசு நவ.24ல் அவசர ஆலோசனை!

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

தவறான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 24-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

யாரோ ஒருவர் தோன்றும் வீடியோ காட்சியில் செயற்கை நுண்ணறிவு மூலம் இன்னொருவரின் முகத்தைப் பொருத்தி போலியான ‘டீப் ஃபேக்’ எனப்படும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

நடிகை ராஷ்மிகா மாந்தனாவின் முகத்தை மட்டும் மார்பிங் செய்த தவறான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இந்தி நடிகர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடனமாடுவது போன்ற வீடியோவும் வெளியானது. டெல்லியில் பாஜக சார்பில் கடந்த வாரம் நடந்த தீபாவளி விழா நிகழ்ச்சியில் தவறான வீடியோக்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

ராஷ்மிகாவின் டீப் ஃபேக்
ராஷ்மிகாவின் டீப் ஃபேக்

இந்நிலையில், தவறான டீப் ஃபேக் வீடியோக்களை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய மின்ணனு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் டெல்லியில் 24-ம் தேதி அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மெட்டா, கூகுள் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியதாவது:

இணையம், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அதே சமயத்தில் அவை தவறாகப் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி இதுகுறித்து கவலை தெரிவித்துப் பேசினார்.

டீப் ஃபேக் உபயத்தில், ’காவாலா’ பாடலில் தமன்னா இடத்தில் சிம்ரன்
டீப் ஃபேக் உபயத்தில், ’காவாலா’ பாடலில் தமன்னா இடத்தில் சிம்ரன்

இணையத்தை பயன்படுத்தும் 120 கோடி இந்தியர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் டீப் ஃபேக் போன்ற தொழில்நுட்பங்கள், போலித் தகவல்கள் பரவுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, விரைவில் புதிய சட்டம் உருவாக்கப்படும். இது தொடர்பாக ஆலோசிக்க வரும் 24-ம் தேதி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் தவறான வீடியோக்களை தடுப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். இந்தியர்களுக்கு இணைய பயன்பாட்டை தொடர்ந்து நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வரகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in