‘இமயத்தின் தங்கம்’: இந்திய எல்லைக்குள் ஊடுருவும் சீனாவின் பின்னிருக்கும் இன்னொரு உண்மை!

எல்லையில் சீன ராணுவத்தினர்
எல்லையில் சீன ராணுவத்தினர்

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் அடிக்கடி சீன ராணுவம் ஊடுருவல் மேற்கொள்வதின் பின்னணியில் ’இமயத்தின் தங்கம்’ என்று அழைக்கப்படும் அரிய வகை மூலிகை இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவுடனான பனி படர்ந்த எல்லை நீள்கிறது. இந்த சர்வதேச எல்லையை அவ்வப்போது ஊடுருவும் சீன ராணுவத்தினரின் அத்துமீறல், இந்திய ராணுவத்தினருக்கு தலைவலியாகவும் நீடிக்கிறது. இதர எல்லைகளைவிட இங்கு சீன ராணுவம் அதிகம் வாலாட்டுவதன் பின்னணியில் ஒரு அரிய மூலிகையும் முக்கியத்துவம் பெறுகிறது.

பூஞ்சை வகையை சேர்ந்த இந்த மூலிகை அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லையில் பனி மலைகளின் பல்லாயிரம் அடி உயரத்தில் கிடைக்கிறது. சீன மருத்துவத்தில் செரிமானம் முதல் ஆண்மைக்குறைவு வரை பல்வேறு தேவைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீன எல்லைக்குள் முன்பு கிடைக்கப்பெற்ற இந்த மூலிகை தற்போது அங்கே தட்டுப்பாடாகி வருவதால் இந்திய எல்லைக்குள் சீனா கண்வைக்கிறது. இது தவிர திபெத் பகுதிகளிலும் கிடைத்தாலும், அருணாச்சலில் தென்படும் மூலிகையே வீரியமிக்கதாக விளங்குகிறது.

கார்டிசெப்ஸ் என்றழைக்கப்படும் இந்த அரிய மூலிகையை, சீனா தனது எல்லைக்குள் மீண்டும் விளைவிக்க எத்தனையோ முயற்சிகள் எடுத்து தோற்றது. ஆய்வுக் கூடங்களில் நிகழ்த்தப்பட்ட சோதனைகளும் தோல்வியைத் தழுவின. கீடா ஜதி என்ற பெயரில் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பெறும் இதன் மருத்துவ குணங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு தங்கத்தை விட அதிகமாகும். இதனால் கார்டிசெப்ஸ், ’இமயத்தின் தங்கம்’ என்றழைக்கப்படுகிறது. பட்டுவளர்ப்பில் தென்படும் கூட்டுப்புழு தோற்றத்தை ஒத்திருப்பதால், அதன் ஆங்கிலப் பெயரான ’கேட்டர்பிலர்’ பங்கஸ் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த இமயத்தின் தங்கத்தை அபகரிக்கவும் சீன ராணுவ வீரர்கள் அவ்வப்போது அணியணியாய் எல்லை தாண்டுகின்றனர். அருணாச்சலின் தங்கம் விளையும் பூமியை அபகரிக்கவும் முயல்கின்றனர். இன்று நேற்றல்ல பலகாலமாய் நிகழும் இந்த அத்துமீறல் விவகாரத்தை சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று தற்போது அம்பலப்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in