
சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில் இரண்டு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானிகள் தூங்கிவிட்டனர். இதன்பின்னர் எச்சரிக்கை அலாரத்தின் உதவியுடன் விமானம் தரையிறக்கப்பட்டது.
கடந்த திங்கள் கிழமை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ATC) விமானம் ET343 அடிஸ் அபாபா விமான நிலையத்தை நெருங்கியபோது எச்சரிக்கை ஒலியை எழுப்பியது, ஆனால் விமானிகள் தூங்கிவிட்டதால் விமானம் தரையிறங்கத் தொடங்கவில்லை. இக்கட்டான அச்சூழலில் இந்த போயிங் 737 விமானம் 37,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்திலிருந்து பலமுறை விமானிகளை தொடர்பு கொள்ள முயன்றும் அவர்கள் எழவில்லை. விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுபாதையைத் தாண்டிச் சென்றபோது, தன்னியக்க பைலட் அமைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அலாரம் எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. இந்த அலாரத்தால் விமானிகள் எழுந்தனர் என்று ஏவியேஷன் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
பின்னர் விமானிகள் எப்படியோ தட்டுத்தடுமாறி 25 நிமிடங்கள் தாமதமாக விமானத்தை தரையிறக்கினர். அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமான கண்காணிப்பு அமைப்பு ADS-B, இந்த சம்பவம் நடந்ததை உறுதிசெய்தது. மேலும், தட்டுத்தடுமாறி விமானப் பாதையில் விமானம் பயணம் செய்த படத்தையும் வெளியிட்டது.
விமான ஆய்வாளர் அலெக்ஸ் மச்செரஸும் ட்விட்டரில் இந்த நிகழ்வைப் பற்றி பதிவிட்டுள்ளார், இது "ஆழமான பரிசீலனக்குரியது" என்று தெரிவித்துள்ளார். விமானியின் சோர்வுதான் இதற்குக் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மே மாதம் நியூயார்க்கில் இருந்து ரோம் சென்ற விமானம் 38,000 அடி உயரத்தில் பயணித்தபோது இரண்டு விமானிகள் தூங்கியபோது இதேபோன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.