சோசலிசத்தின் தூண் முலாயம் சிங்: உ.பியில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - பிரதமர்,ஜனாதிபதி உருக்கமான இரங்கல்

சோசலிசத்தின் தூண் முலாயம் சிங்: உ.பியில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - பிரதமர்,ஜனாதிபதி உருக்கமான இரங்கல்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், உ.பி முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த யோகி ஆதித்யநாத், "அவர் சோசலிசத்தின் தூணாக இருந்தார். அவரது மரணம் ஒரு போராட்ட சகாப்தத்தின் முடிவாகும். முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய விரும்புகிறேன் மற்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்

மேலும், முன்னாள் முதல்வரின் மறைவுக்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்த அவர், இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் தெரிவித்தார். முலாயம் சிங்கின் மகனும், உ.பி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவிடம் தொலைபேசியில் யோகி இரங்கல் கூறியதாக அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "முலாயம் சிங் யாதவ், உ.பி மற்றும் தேசிய அரசியலில் தனித்துவம் மிக்கவர். அவர் அவசரநிலையின் போது ஜனநாயகத்தின் முக்கிய சிப்பாயாக இருந்தார். பாதுகாப்பு அமைச்சராக, வலிமையான இந்தியாவுக்காக உழைத்தார். அவரது பாராளுமன்ற தலையீடுகள் நுண்ணறிவு மிக்கவை மற்றும் தேசிய நலன்களை மேம்படுத்தும் நோக்கத்தில் கருத்துக்களை வலியுறுத்துவார். முலாயம் சிங் யாதவ் ஒரு குறிப்பிடத்தக்க ஆளுமை. மக்களின் பிரச்சினைகளை உணரும் ஒரு தாழ்மையான மற்றும் அடித்தளமான தலைவராக அவர் பரவலாகப் போற்றப்பட்டார். அவர் மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். லோக்நாயக் ஜேபி மற்றும் டாக்டர் லோஹியாவின் கொள்கைகளை பிரபலப்படுத்துவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்" என தெரிவித்துள்ளார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "சாதாரண சூழலில் இருந்து வந்த முலாயம் சிங் யாதவின் சாதனைகள் அசாதாரணமானவை. அவரின் மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர் இந்த நிலத்துடன் தொடர்புடைய ஒரு பழம்பெரும் தலைவர். அனைத்து கட்சி மக்களாலும் மதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் இன்று காலை 8.16 மணியளவில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 22 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாதவின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அக்டோபர் 2 ம் தேதி ஐசியுவிற்கு மாற்றப்பட்டார்.

உத்தரப்பிரதேசத்தின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான முலாயம் சிங் யாதவ், 1989 - 1991, 1993-95, 2003 - 2007 ஆகிய காலகட்டங்களில் உத்தரபிரதேச முதல்வராக இருந்துள்ளார். 1996ல் ஐக்கிய முன்னணி அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in