ரவுடிகள் 12 பேருக்கும் உடல் தகுதி பரிசோதனை நிறைவு: ராமஜெயம் கொலை வழக்கில் போலீஸ் அடுத்த மூவ்

ரவுடிகள் 12  பேருக்கும் உடல் தகுதி  பரிசோதனை நிறைவு: ராமஜெயம் கொலை வழக்கில் போலீஸ் அடுத்த மூவ்

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ள ரவுடிகள் 12 பேருக்கும் உடல் தகுதி மருத்துவ பரிசோதனை இன்றுடன்  நிறைவு பெற்றது.

திருச்சி சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி  ராமஜெயம் கொலை வழக்கில் தமிழகத்தின் முக்கியமான ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்திட  அனுமதி கேட்டு திருச்சி ஜே எம் 6  நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இதில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். அவர்களுக்கு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்த நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டிருந்த நிலையில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று சாமி ரவி, திலீப், சிவா ராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர் ஆகிய ஆறு பேருக்கு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

இன்று மோகன்ராம், கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து ஆகிய 5 பேருக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இதய நோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், மனநல மருத்துவர், பொது மருத்துவர் என ஐந்து மருத்துவர்களைக்  கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். கடலூர் ரவுடி செந்தில் என்பவருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. 

இந்த பரிசோதனைகள் முடிவுகள்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதன் அடிப்படையில் அவர்களிடம்  உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கான நாள் மற்றும் அனுமதியை நீதிபதி எதிர்வரும்  21-ம் தேதி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in