9.20 லட்சம் பரிசுக்கு ஆசைப்பட்டு 2.20 லட்சத்தை இழந்த போட்டோகிராபர்: பரிசு கூப்பன் அனுப்பி பணம் பறித்த கும்பல்

9.20 லட்சம் பரிசுக்கு ஆசைப்பட்டு 2.20 லட்சத்தை இழந்த போட்டோகிராபர்: பரிசு கூப்பன் அனுப்பி பணம் பறித்த கும்பல்

பரிசு கூப்பன் அனுப்பி வைத்து போட்டோகிராபரிடம் ரூ.2.20 லட்சத்தை பறித்த கும்பல் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் வடக்கு தெரு அய்யாக்கண்ணு பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். இவர் போட்டோகிராபர் தொழில் செய்து வருகிறார். இணைய தள வர்த்தகத்தில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி வந்தார்.

இந்தநிலையில், கடந்த 25-ல் இவரது பெயருக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த மனு அகர்வால் என்பவரிடம் இருந்து பதிவு தபால் வந்தது. அதில் இருந்த பிரபல இணைய தள வர்த்தக நிறுவனத்தின் ஸ்கிராட்ச் கார்டு இருந்தது. அதில் கருப்பெழுத்துகளால் மறைக்கப்பட்ட பகுதியை சவுந்தரபாண்டியன் சுரண்டி பார்த்தார்.

அதில் ரூ.8 லட்சம் பரிசு விழுந்திருப்பதாக தகவல் இருந்தது. இது தொடர்பாக அதிலிருந்த செல்போன்களில் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்த செல்போன் எண்களில் சவுந்தரபாண்டியன் தொடர்பு கொண்டார்.

மறுமுனையில் ஹிந்தி கலந்த தமிழில் பேசிய நபர் பிரபல இணைய தள வர்த்தக நிறுவனத்தின் 14-வது ஆண்டு தொடக்க நாளையொட்டி நடந்த குலுக்கலில் ரூ.9.20 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக கூறினார்.

இதை நம்பிய சவுந்தரபாண்டியன், அவர்கள் கூறிய வங்கிக் கணக்கில் தனது வங்கிக் கணக்கு, தனது நண்பர் கணக்கு மூலம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 600 அனுப்பினார். மேலும் பணம் கேட்டு நச்சரித்தபோது, பிரபல இணையதள வர்த்தக நிறுவனத்தின் பெயரில் தான் பணம் இழந்ததை அறிந்தார்.

இது குறித்து போலீஸ் இணையதள முகவரில் சவுந்தரபாண்டியன் புகார் செய்தார். இதனடிப்படையில் ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீஸார் மோசடி உள்பட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in