ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஜப்பானிலிருந்து வந்த போன் கால்; தகவலால் பதறிய போலீஸ்: நடந்தது என்ன?

ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஜப்பானிலிருந்து வந்த போன் கால்; தகவலால் பதறிய போலீஸ்: நடந்தது என்ன?

லோன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தலைமறைவானவரை கண்டுபிடிக்க கடனாளி வெடிகுண்டு தயாரிப்பதாக போலீஸூக்கு பொய் தகவல் அளித்துள்ளது ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.

சென்னை ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறையை நேற்று தொடர்பு கொண்ட நபர் ஒருவர், ஐயப்பன் தாங்கல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வரும் சபீர் என்பவர் வீட்டில் வெடிகுண்டு தயாரிப்பதாக கூறி உடனே இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உடனே மாங்காடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் அந்த மர்ம நபர் கூறிய வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாததால் புரளி என தெரியவந்தது. இதையடுத்து தொடர்பு கொண்ட மர்ம நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது ஜப்பானில் இருந்து அழைப்பு வந்திருப்பதும், yearly salary என்ற ஆன்லைன் லோன் நிறுவனத்தினர் பேசியது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சோதனை மேற்கொண்ட வீட்டில் வசித்து வந்த இம்ரான் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது, சபீர் என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு புழல் பகுதிக்கு சென்று விட்டதாக தெரிவித்ததை அடுத்து போலீஸார் புழலில் வசித்து வரும் சபீரை பிடித்து விசாரணை செய்த போது கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் தாங்கலில் வசித்து வந்த போது yearly salary என்ற ஆன்லைன் லோன் ஆப் மூலமாக 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதன் பிறகு விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டதால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் செயலி நிறுவனம் பலமுறை தன்னை தொடர்பு கொண்டு கடனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததால் வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு குடியேறியதும் அதன் பிறகு கடன் செயலி நிறுவனம் கடனை பெற பல வழிகளை கையாண்ட போதும், அவரை கண்டுபிடிக்க முடியாததால் வெடிகுண்டு தயாரிப்பதாக புரளியை கிளம்பிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த செல்போன் செயலி நிறுவன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம் அதிக வட்டி கேட்டு பொதுமக்களை மிரட்டியும், ஆபாசமாக புகைப்படங்களை சித்தரித்தும் பணப்பறிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவர்களது டார்ச்சர் தாங்கமுடியாமல் பாதிக்கப்பட்ட பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறி வருகிறது. ஆனால் தற்போது கடனாளியை கண்டுபிடிக்க முடியாததால் அவர் வெடிகுண்டு தயாரிப்பதாக ஆன்லைன் லோன் நிறுவனம் போலீஸாருக்கு தகவல் கொடுத்து புதுவித டெக்னிக்கை பயன்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in