ராணுவ லேசர் துப்பாக்கியால் பார்வை பறிக்கும் சீனா: தென்சீனக் கடலில் மீண்டும் திகுதிகு!

திமிறும் பிலிப்பைன்ஸ்; ஆதரிக்கும் அமெரிக்கா
தென்சீனக் கடல் பிராந்தியம்
தென்சீனக் கடல் பிராந்தியம்

தென்சீனக் கடலில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சீனாவால், தங்கள் கடற்படை வீரர்கள் தொடர்ந்து பார்வை இழப்பதாக பிலிப்பைன்ஸ் தேசம் குற்றம்சாட்டி உள்ளது. சீனாவின் லேசர் தாக்குதல் தொடர்பாக விளக்கம் கோரி சீன தூதருக்கு பிலிப்பைன் அதிபர் சம்மன் அனுப்பி உள்ளார். பிலிப்பைனுக்கு ஆதரவு தெரிவித்தும், சீனாவுக்கு எதிராகவும் அமெரிக்கா களத்தில் இறங்குகிறது.

எல்லை எதுவானாலும் சர்ச்சைகளைக் கூட்டுவது சீனாவின் வாடிக்கை. இந்த வரிசையில் தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கி அதில் தனது ராணுவத் தளவாடங்களை குவித்து வருகிறது. இதனால் தங்கள் கடல் எல்லையும், கடல் உரிமையும் பறிபோவதாக பிலிப்பைன்ஸ் மட்டுமன்றி வியட்நாம், மலேசியா, தைவான், புருனே உள்ளிட்ட நாடுகள் புலம்பி வருகின்றன.

தென்சீனக் கடலில் சீனாவின் தாக்குதல்
தென்சீனக் கடலில் சீனாவின் தாக்குதல்

சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்படி 2016ல் வெளியான தீர்ப்பு, தென்சீனக் கடலில் சீனா தற்போது நிர்மாணித்துள்ள அத்துமீறல் பிராந்தியங்களுக்கு, சட்ட ரீதியாகவோ, வரலாற்று பின்னணியிலோ எந்த உரிமையும் இல்லை என்று சீனாவுக்கு எதிராக அமைந்தது. சர்வதேச நீதிமன்ற தீர்ப்பை சட்டைசெய்யாத சீனா தனது அத்துமீறலை தொடர்ந்து வருகிறது.

மறுபுறத்தில் தென்சீனக் கடலில் சீனாவால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு, அழைப்பின்றி அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது. தென்சீனக்கடல் நீர் எல்லையில் அமெரிக்காவுக்கு எந்த உரிமையும் இல்லாதபோதும், ‘நட்பு நாடுகளுக்காகவ்ம், சர்வதேச கடல்வழிப் பாதையின் உரிமைக்காகவும் சீனாவை தட்டிக்கேட்போம்’ என்று அமெரிக்கா களமிறங்கி உள்ளது. இதனால் சீனா - அமெரிக்கா இடையிலான இன்னொரு முனை மோதலாகவும் தென்சீனக் கடல் மாறி உள்ளது.

அண்மையில் தனது நீரெல்லையில் உலவிய பிலிப்பைன் கடற்படை கப்பலை வழிமறித்த சீன கடற்படையினர், ராணுவ லேசர் துப்பாக்கி கொண்டு தங்கள் வீரர்களின் பார்வையை பறித்த சம்பவம் பிலிப்பைனை கொதிக்கச் செய்துள்ளது. பிலிப்பைன்ஸின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு சீனா குந்தகம் செய்வதை பொறுத்துப்போக முடியாது என குமுறியுள்ளது.

சீனாவின் லேசர் தாக்குதல்
சீனாவின் லேசர் தாக்குதல்பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை பதிவு

நடப்பாண்டு ஜனவரியில் சீன அதிபருடனான நேரடி சந்திப்பிலும், பிலிப்பைன்ஸ் உடனான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்த்துக்கொள்வதாக எடுக்கப்பட்ட இருதரப்பு முடிவை சீனா மீறி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் பிலிப்பைன்ஸ் பார்வையை பறிக்கும் சீனாவின் லேசர் தாக்குதல் தொடர்பாக, பிலிப்பைன்ஸ் அதிபர் பாங் பாங் மார்கோஸை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறும், சீனத் தூதருக்கு பிலிப்பைன் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. பிலிப்பைன்ஸின் இந்த அதிரடிக்கு அமெரிக்கா முன்வந்து ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க தைரியத்தில் பிலிப்பைன்ஸ் எடுத்திருக்கும் முடிவை சீனா ரசிக்கவில்லை.

இவற்றின் மத்தியில் தென்சீனக் கடலை முன்வைத்து புதிய கட்டத்தை எட்டியிருக்கும் பழைய மோதலுக்கு, சீனா லேசர் தாக்குதலில் பதில் சொல்லுமா அல்லது பேச்சுவார்த்தைக்கு இணங்குமா என்பதில் பிராந்தியத்தின் பதட்டம் பொதிந்திருக்கிறது. இதன் மத்தியில் சீனா உபயோகிக்கும் நவீன ராணுவ லேசர் துப்பாக்கி குறித்தும் அதன் பிரதாபங்கள் பற்றியும், சீனாவுடன் போர் அபாயத்தில் நீடிக்கும் இந்தியா போன்ற நாடுகளும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in