
பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானில் அந்நியச் செலவாணி வெகுவாய் கரைந்து வருகிறது. இந்த சூழலில் ’தேசத்தின் நலனுக்காக’ பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது
பெட்ரோலிய எரிபொருட்களின் அதிரடி விலை உயர்வை இன்று(ஆகஸ்ட் 1) அறிவித்த பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர், ’தேசத்தின் நலனுக்காக’ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார சுணக்கம் ஆகியவற்றால் ஏற்கனவே அறிவிக்கப்படாத திவால் நிலைமைக்கு பாகிஸ்தான் ஆளாகி உள்ளது. இவற்றின் மத்தியில் எரிபொருட்களின் விலை உயர்வும் மக்களை கொதிக்கச் செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்த நிலையில், பாகிஸ்தானில் அந்நியச் செலவாணி வெகுவாய் கரைந்து வருகிறது. நெருக்கடிகள் தீர்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியுள்ளது. கடனுதவிக்கான நிபந்தனைகளில், மானியங்கள் நிறுத்தி வைப்பு, நலத்திட்டங்களில் வெட்டு போன்றவற்றை அமல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் நெருக்கடி தந்து வருகிறது.
தற்போதைய எரிபொருள் தடாலடி விலை உயர்வும் இந்த வகையிலே அமைந்துள்ளது. பாகிஸ்தான் நிதியமைச்சரும், பெட்ரோலிய விலை உயர்வுக்கு ஐஎம்எஃப் நிபந்தனையே காரணம் என வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஆனால் இவற்றை பாகிஸ்தான் பொதுமக்களால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏற்கனவே விலைவாசி உயர்வால் திண்டாடி வரும் மக்களை, அதிகரிக்கும் எரிபொருள் விலை உயர்வு அனைத்து திசையிலும் மூழ்கடிக்கத் தயாராகிறது.
பொருளாதாரம், அரசியல் என ஸ்திரமின்மை நீடிக்கும் தேசத்தின் இக்கட்டான சூழலை பயன்படுத்திக்கொண்டு, பயங்கரவாதிகள் தலையெடுத்து ஆடுவது பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது. இவற்றின் மத்தியில் பொதுமக்களின் அதிருப்தியும் அதிகரிப்பது பாகிஸ்தானுக்கு மிகவும் சோதனையான காலத்தை தந்திருக்கிறது.