மாநில அரசுகளால்தான் பெட்ரோல் விலை குறையவில்லை: ஹர்தீப் சிங் புரி

இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் குற்றச்சாட்டு
மாநில அரசுகளால்தான் பெட்ரோல் விலை குறையவில்லை: ஹர்தீப் சிங் புரி
பவானிபூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது ஹர்தீப் சிங் புரி

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு விரும்புகிறது. மாநில அரசுகள் வருவாயை இழக்க விரும்பாததால், மத்தியப் பட்டியலுக்கு பெட்ரோல், டீசலை தர மறுக்கின்றன.

இதனால் மத்திய, மாநில அரசுகளால் இரட்டை வரிவிதிப்புக்கு அவை உள்ளாகின்றன என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் சட்டப்பேரவைத் தொகுதியில், இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக அவர் கொல்கத்தா வந்திருந்தார். நிருபர்கள் அவரை, நேற்று (செப். 22) சந்தித்தபோது இதைத் தெரிவித்தார்.

“மத்திய அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.32 உற்பத்தி வரி வசூலிக்கிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 19 அமெரிக்க டாலர்கள் விற்றபோதும் இதே 32 ரூபாயைத்தான் உற்பத்தி வரியாக வசூலித்தோம், இப்போது ஒரு பீப்பாய் 75 டாலர்களாக உயர்ந்துவிட்ட போதும் அதே 32 ரூபாயைத்தான் வசூலிக்கிறோம். இந்தப் பணத்தைக் கொண்டுதான் பெருந்தொற்றுக் காலத்தில் வேலையின்றி முடங்கியிருக்கும் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருள்கள் அளிக்கிறோம், ஏழைகளுக்கு இலவச வீடுகளைக் கட்டித்தருகிறோம், உஜ்வலா திட்டத்தின்கீழ் இலவச எரிவாயு அடுப்புக்கான இணைப்பு வழங்குகிறோம், வேறு சில சமூக நல திட்டங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.

மேற்கு வங்க அரசு ஜூலை மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.51 கூடுதல் விற்பனை வரி விதித்ததால், கொல்கத்தாவில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டியது. மேற்கு வங்கத்தில் மத்திய, மாநில அரசுகளின் வரியளவு சேர்ந்து 40% ஆக இருக்கிறது. மத்திய அரசை எதிர்த்து அறிக்கைகள் வெளியிடுவது எளிது. மாநில அரசு விற்பனை விலையை அதிகரித்திருக்காவிட்டால், அது 100 ரூபாயைத் தாண்டியிருக்காது.

தேர்தல் முடிவு

“பவானிபூரின் தேர்தல் முடிவு ஏற்கெனவே தெரிந்ததுதான் (மம்தா வெற்றி உறுதி) என்கிறார்கள். அப்படியானால் மாநில அமைச்சர்கள் அனைவரும் அங்கே வீதிக்கு வீதி போய் வாக்கு சேகரிப்பது ஏன்? எங்களுடைய வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால் எங்களுடைய கவலையெல்லாம் தேர்தல் முடிவுக்குப் பிறகு அரங்கேறப்போகும் வன்முறைச் சம்பவங்கள் குறித்துத் தான்” என்றார் ஹர்தீப் சிங் புரி.

Related Stories

No stories found.