கந்துவட்டி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது

கந்துவட்டி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு: ரவுடி உள்ளிட்ட 5 பேர் கைது

தூத்துக்குடியில் கந்துவட்டி தொழில் செய்து வந்தவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுவீசி பைக்கை எரித்த ரவுடி உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் மகேஷ் பூபதி (23). இவர் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 12-ம் தேதி தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் எதிரே உள்ள ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது எதிரே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் இவரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக உணவகத்தின் கடை உரிமையாளர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தாராம்.

இந்த நிலையில் இரவு மகேஷ் பூபதி வீட்டில் 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வந்து தகராறு செய்து அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் மகேஷ் பூபதியின் பைக் எரிந்து சேதமானது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி தெற்கு என்பரர் தெருவை சேர்ந்த மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் (25), பீட்டர் சர்ச் தெருவை சேர்ந்த ராபின்சன் (29), அழகேச புரத்தை சேர்ந்த கண்ண பெருமாள் (22), தெற்கு ராஜா தெருவை சேர்ந்த ஜான் பிர்ட்டர்ஸ் (30), சேது ராஜா தெருவை சேர்ந்த ஹரிஹரன் (24) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து அரிவாள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மரிய அந்தோணி பிச்சையா டைட்டஸ் மீது 14 வழக்குகள் உள்ளது. இவர் பிரபல ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in