தரங்கம்பாடி அருகே வாய்க்கால் தூர்வாரிய போது கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை பாதுகாப்பாக தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நெடுவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட செறுகடம்பனூர் கிராமத்தில் உள்ள சிங்கமட வாய்க்கால் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. அப்போது பொக்லைன் இயந்திரம் கொண்டு வாய்க்காலை தூர்வாரி மண்ணை கரையில் அணைத்த போது, மண்ணுக்கு அடியில் இருந்த 5 அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பெருமாள் சிலையை வெளியில் எடுத்து வைத்து பூக்களை அணிவித்து தீபம் ஏற்றி வழிபட்டுள்ளனர். தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் மற்றும் பொரையாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழமையான பெருமாள் சிலையை கைப்பற்றி எடுத்து வந்து, தரங்கம்பாடி தாலுக்கா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.