சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குமரி திருவள்ளுவர் சிலையைப் பார்க்க 6-ம் தேதி முதல் அனுமதி

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலைசுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: குமரி திருவள்ளுவர் சிலையைப் பார்க்க 6-ம் தேதி முதல் அனுமதி

கன்னியாகுமரியில் ரசாயனப் பூச்சுப் பணி முடிவடைந்த நிலையில் மார்ச் 6-ம் தேதி முதல் திருவள்ளுவர் சிலையைக் காண சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை உள்ளது. திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங்களை உணர்த்தும்வகையில் இந்த சிலையும் 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடல், உப்புக்காற்றின் நடுவே நிற்பதால் திருவள்ளுவர் சிலைக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயனக் கலவை பூசப்படுவது வழக்கம்.

இந்த முறை கடந்த 2022 ஜூன் மாதம் தொடங்கிய ரசாயனக் கலவை பூசும்பணி, கடந்த ஜனவரி மாதத்தில் முடிவடைந்தது. ஆனால், பணிகள் முடிந்து ஒன்றரை மாதங்கள் கடந்தும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த பயணிகள் விவேகானந்தர் பாறைக்கு மட்டும் சென்று வந்தனர்.

கடல் நடுவே கம்பீரமாகக் காட்சி அளிக்கும் திருவள்ளுவர் சிலையை அவர்கள் அருகில் சென்று பார்க்கமுடியவில்லை. அதேநேரத்தில் குமரிக்கு உலகம் முழுவதும் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு மீண்டும் எப்போது அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பும் இருந்துவந்தது.

இந்நிலையில் மார்ச் 6-ம் தேதி முதல் கன்னியாகுமரி பூம்புகார் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் படகுகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மட்டுமல்லாது, திருவள்ளுவர் சிலைக்கும் செல்லும் என குமரி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in