
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நாளை (ஜனவரி 8) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு என்று தனி பாரம்பரியம் உண்டு. குறிப்பாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டுகள் உலகப்புகழ் பெற்றவை. அங்கு தை முதல் நாள் தொடங்கி வரிசையாக போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் தமிழ்நாட்டில் முதல்முதலாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் ஜன. 2-ம் தேதியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதன் பின்னர்தான் வரிசையாக மற்ற ஊர்களில் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டியை ஜன.2-ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் மக்கள் ஆட்சியரிடம் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அரசாணை வெளியிடப்படாததால் அதற்கு அனுமதி தரவில்லை. இந்த நிலையில் போட்டியை 6-ம் தேதி நடத்துவதற்கு முடிவு செய்து விண்ணப்பித்திருந்தனர். அதற்காக கடந்த ஐந்தாம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆறாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறையாக மேற்கொள்ளவில்லை, மாடுகள் வெளியே வரக்கூடிய இடங்கள் முறையாக அமைக்கவில்லை, மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு ஆன்லைன் முறையில் முறையாக டோக்கன் வழங்கப்படவில்லை, வீரர்களுக்கான கரோனா சோதனை மேற்கொள்ளவில்லை என அடுக்கடுக்கான காரணங்களை கூறி ஆறாம் தேதி போட்டி நடைபெற அனுமதி மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டும், நெடுஞ்சாலையில் சாலைமறியல் செய்தும் போராட்டம் நடத்தி வந்தனர். விழாக்குழுவினர் மற்றும் மக்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் பல்வேறு வகைகளிலும் அவர்களைச் சமாதானப்படுத்தி மற்றொரு தேதியில் நிச்சயம் போட்டியை நடத்திக் கொள்ளலாம் என்று உறுதி அளித்தார். அதையடுத்து நாளை (ஜன.8) போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு நாளை பெருமையுடன், தடைகளைத் தாண்டி சிறப்புடன் நடைபெற உள்ளது. அங்கு சீறிப்பாய தயாராக காளைகளும் அவற்றோடு மல்லுக்கட்ட காளையர்களும் தச்சங்குறிச்சிக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். நாளை அனல்பறக்கும் வாடிவாசலை தொலைக்காட்சிகள் வழியாக தமிழகம் கண்டு களிக்கும்.