நெல்லையில் 5 மாதங்களுக்குப் பிறகு இயங்கிய 40 குவாரிகள்: 14 குவாரிகளுக்கு நிரந்தரத்தடை

நெல்லை குவாரி விபத்து
நெல்லை குவாரி விபத்து படம்: லெட்சுமி அருண்

திருநெல்வேலி மாவட்டத்தில் 14 குவாரிகள் செயல்படுவதற்கு நிரந்தரமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் ஏற்பட்ட குவாரி விபத்தினைத் தொடர்ந்து குவாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் உள்ள குவாரியில் கடந்த மே 14-ம் தேதி விபத்து ஏற்பட்டது. இதில் குவாரியில் பணிசெய்த நான்கு தொழிலாளர்கள் உயிர் இழந்தனர். இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் செயல்படுவந்த 54 குவாரிகள் தற்காலிகமாக மூடப்பட்டு, நெல்லை ஆட்சியர் விஷ்ணுவின் உத்தரவின் பேரில் அங்கு தொடர் ஆய்வுகள் நடந்துவந்தது.

இதன் தொடர்ச்சியாக ஜூன் 9- ம் தேதி தொடங்கி ஒரு மாத காலத்திற்கு ஆறுபேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தொடர் ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். இதில் 14 குவாரிகள் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை ஏன் மூடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இதேபோல் 40 குவாரிகளுக்கு சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை மறு ஆய்வு செய்யக்கோரி குவாரி உரிமையாளர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கல் குவாரிகள் மூடப்பட்டிருப்பதால் கட்டுமானப் பணிகள் முடங்கி இருப்பதாகவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில் அபராதம் விதிக்கப்பட்ட 40 குவாரிகள் இடைக்காலமாக செயல்பட அனுமதிக்கலாம். மீதமுள்ள 14 குவாரிகளில் விதிமீறல் நடந்திருப்பதால் நிரந்தரமாக மூடவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த 14 குவாரிகள் தவிர்த்து, மீதமுள்ள 40 குவாரிகள் நெல்லை மாவட்டத்தில் 5 மாதங்களுக்குப் பின்பு இன்றுமுதல் இயங்கத் தொடங்கின.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in