`நீங்களே காரணமாக இருக்கலாமா?; மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தாதீர்கள்'-கலெக்டர் அறிவுரை

பெண்களை சந்தித்து உரையாடும் கலெக்டர்
பெண்களை சந்தித்து உரையாடும் கலெக்டர்

மாதவிடாய் காலங்களில் பெண்களை தனிமைப்படுத்துவதை  தயவு செய்து கைவிட வேண்டும் என்று  அந்த வழக்கம் நடைமுறையில் இருக்கும் கிராமத்திற்கு நேரில் சென்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே  இனாம் அகரம் ஊராட்சியில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனி கட்டிடத்தில் தனிமைப்படுத்தப்படுவதாக வந்த செய்திகளின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ப. ஸ்ரீவெங்கடபிரியா நேற்று  அங்கு நேரில் சென்று  ஆய்வு செய்தார்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்துவதாக கூறப்படும் கட்டிடத்தை பார்வையிட்டவர்,  இனாம் அகரம் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளில் தனிநபர் கழிப்பறைகள் முறையாக கட்டப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்டவை குறித்தும்  விரிவாக ஆய்வு செய்தார்.

பின்னர் ஊர் பொதுமக்களை  குறிப்பாக பெண்களை வரவழைத்து அவர்களிடம் அவர் பேசுகையில், "இனாம் அகரம் ஊராட்சியில்  அரசு துணை சுகாதார நிலையம், குடிநீர் வசதிக்காக மூன்று மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள், நுாலகம், குழந்தைகள் மையம், தொடக்கப்பள்ளி என அனைத்து வசதிகளும் உள்ளது.  இனாம் அகரம் ஊராட்சியில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் தனிமைப்படுத்தப்படும் பழக்கம் இருந்து வருவதாக அறிகிறோம். மாதவிடாய் காலங்களில் பெண்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். நோய்த்தொற்று ஏற்படாத வகையில் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். 

தமிழக அரசு பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின் வழங்கி வருகிறது. மேலும் அங்கன்வாடி மையங்கள், சுகாதார வளாகங்கள், ஆரம்ப சுகாதார மையங்களிலும் நாப்கின் வழங்கப்பட்டு வருகிறது.  இந்த நாப்கின்களை உங்களைப் போன்ற பெண்கள்தான் தயார் செய்து கொடுக்கிறார்கள். நோய் தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திற்காகவே அரசால் இலவசமாக நாப்கின்கள் கொடுக்கப்படுகிறது. 

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதாரமாக இருந்தால் தான் அவர்களுடைய கர்ப்பப்பை உள்ளிட்ட உறுப்புகள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும். அவ்வாறு சுகாதாரமாக இல்லாத பெண்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு, அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டால் பெண்கள் கருவுறுதலில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும், உடல் உபாதைகள் பல உருவாகும், உடல் ஆரோக்கியம் குறையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

உங்கள் உறவினர்களுக்கு தொற்று ஏற்பட நீங்களே காரணமாக இருக்கலாமா?. இன்றைய நவீன காலத்தில் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். ஒருவீட்டில் அனைவரின் நலனையும் பாதுகாக்கும் பெண்களின் நலம் மிகவும் முக்கியம். எனவே, ஊர்மக்கள் தயவுகூர்ந்து மாதவிடாய் காலங்களில் பெண்களை பொது இடத்தில் தனிமைப்படுத்தும் பழக்கத்தை கைவிடவேண்டும். பெரும்பான்மையாக வீடுகளில் தனிநபர்  கழிப்பிடம் உள்ளது.  மாதவிடாய் காலத்தில் பெண்களை உங்கள் வீடுகளிலேயே வைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.

உங்கள் சுகாதாரத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பேணுவதற்காக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. உங்கள் குழந்தைகளின், உறவினர்களின் நலன் கருதி நீங்கள் ஒரு அடி எடுத்து வையுங்கள். பொதுமக்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும். மகளிர் சுகாதார வளாகங்கள், தனிநபர் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள், கழிவுநீர் கால்வாய்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என உங்களின் கோரிக்க எதுவாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. 

அதே நேரத்தில், மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் இப்பகுதி கிராம மக்களிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால் மூட நம்பிக்கைகளை கலைந்து பெண்களுக்கான உடல் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மாதவிடாய் காலங்களில் பெண்களை  பொது இடங்களில் தங்க வைக்கப்படுவதை கைவிட வேண்டும்" என்று கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in