மார்க்சிஸ்ட் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: எழுத்தாளர் சோ.தர்மன் ஆவேசம்

எழுத்தாளர் சோ.தர்மன்
எழுத்தாளர் சோ.தர்மன்மார்க்சிஸ்ட் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: எழுத்தாளர் சோ.தர்மன் ஆவேசம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேசிய கட்சி என்னும் அந்தஸ்து பறிபோனது குறித்து தன் முகநூல் பக்கத்தில் வேதனை ததும்பும் பதிவு ஒன்றை எழுதி உள்ளார் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கம்னியூஸ்ட் கட்சி தேசியக் கட்சி அந்தஸ்த்தை இழந்து விட்டது. ஒன்றாக இருந்து காத்திரமாகச் செயல்பட்டு பெரிய நம்பிக்கையாக இருந்த ஒன்றுபட்ட கம்னியூஸ்ட் கட்சியை நாங்கள் புரட்சி செய்யப் போகிறோம் என்று துண்டாக்கி உதயமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.பிரிந்து வந்து நீங்கள் செய்த புரட்சி என்ன?

ஏறத்தாழ 35ஆண்டுகள் கோலோச்சிய மேற்கு வங்காளத்தில் புதிதாக உருவான எந்த வரலாற்றுப் பின்னணியும் இல்லாத மம்தா, இடதுசாரி அரசியலை முற்றாக வெற்றி பெற முடிகிறதென்றால் அங்கே ஜோதிபாசு நடத்தியது இடதுசாரி அரசியல்தானா? அங்கே இத்தனை ஆண்டுகள் இடதுசாரி அரசியல் நடந்திருந்தால் வேறு கட்சிகள் உள்ளே வந்திருக்க முடியுமா?

அதே போல் திரிபுரா மாநிலத்தில் இடதுசாரி அரசியலை வெகு எளிதாக அகற்றிவிட்டு ஆட்சியை பாஜக கைப்பற்றியது. மார்க்சிஸ்ட்டுகள் இது பற்றியெல்லாம் கவலைப்படுவது மாதிரியோ, ஒரு நீண்ட விவாதத்தை உருவாக்கியது மாதிரியோ தெரியவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அரசு ஊழியர்கள்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் மூலதனம். கிராமங்களில் இன்னும் வலுவாக காலூன்றவில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற போர்வையில் அங்கேயும் அரசு ஊழியர்கள்தான். இவர்கள் எழுதிய எந்தப் புத்தகமும் இது வரை அரசால் தடை செய்யப்படவோ, அந்த எழுத்தாளர் விசாரணைக்குட்படுத்தப்படவோ இல்லை.

உலக ஒற்றுமை பேசும் இரண்டு கம்னியூஸ்ட் கட்சிகளும் தங்களுடைய ஒற்றுமையைப் பற்றி சிந்திக்கலாம், அல்லது இரு கட்சிகளுக்குமான கொள்கை வேறு பாடு என்னவென்றாவது சொல்லலாம். 1976-ம் ஆண்டு முதல் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசியில் இருந்து போராட்டங்களை நடத்தி பல முறை சிறைச்சாலைக்கு போன வயிற்றெரிச்சலில்தான் இந்தப் பதிவு.

இரண்டு கம்னியூஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் அரசு 'தகைசால் தமிழர் விருது' வழங்கி கௌரவிக்கிறது.அப்படியென்றால் என்ன அர்த்தம். உங்களை மாதிரி நல்லவர்கள் தமிழ்நாட்டிலேயே இல்லை என்றும் இப்படி நல்லவர்களாகவே இருங்கள் என்றும் அர்த்தம். கம்னியூஸ்ட்கட்சியின் தலைவர்கள் அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவர்களா இருக்காங்களே? பிறகு எப்படிங்க, புரட்சியை கொண்டு வருவது?”என எழுத்தாளர் சோ.தர்மன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in