
ஆவின் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படாததால் தூத்துக்குடி மாநகரில் இன்று காலை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
தூத்துக்குடி மாநகருக்கு நெல்லை ஆவின் நிறுவனத்தில் இருந்து பால் பாக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதிகாலையிலேயே பால் பாக்கெட் வந்து காலையில் மக்கள் பயன்பாட்டுக்கு அவை வழங்கப்பட்டுவிடும். ஆனால் கடந்த மூன்று நாட்களாக ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு பிற்பகல் 12 மணி, 1 மணி அளவிலேயே பால் பாக்கெட் விநியோகம் செய்யப்பட்டன.
ஆனால் இன்று முற்றிலுமாக தூத்துக்குடிக்கு ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாலை ஆவின் பால் வாங்க கடைகளுக்கு வந்த பொதுமக்கள் பால் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர். வேறு வழி இல்லாமல் தனியார் நிறுவன பால்களை வாங்கிச் சென்றனர். எனவே, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆவின் பால் கிடைக்காததால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
விவசாயிகளிடம் இருந்து ஆவின் நிறுவனம் முறையாக பால் கொள்முதல் செய்யாததே இந்த ஆவின் பால் தட்டுப்பாட்டிற்கு காரணம் என கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகரில் ஆவின் பால் கடைகளில் விற்பனைக்கு வராமல் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை என கூறிய வியாபாரிகள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.