கோவை சிறைவாசிகளுக்கு 5 ஆயிரம் புத்தகம் தானமாக கொடுத்த திருப்பூர் மக்கள்!

கோப்பு படம்
கோப்பு படம் கோவை சிறைவாசிகளுக்கு 5 ஆயிரம் புத்தகம் தானமாக கொடுத்த திருப்பூர் மக்கள்!

கோவை சிறைவாசிகளுக்கு 5 ஆயிரம் புத்தகம் தானமாக கொடுத்துள்ளனர் திருப்பூர் மக்கள்.

கோவை மத்திய சிறைச்சாலை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலை 1872-ம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சியின் போது கட்டப்பட்டது. இச்சிறைச்சாலை 167.76 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிறைச்சாலையில் 2,208 கைதிகள் தங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை 1908 முதல் 1910 வரை சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள திறந்தவெளி நிலத்தை கைதிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர். சிறையில் உள்ள நூலகம் சிறை கைதிகளால் பெரும் அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மத்திய சிறைச்சாலையில் சிறைக் கைதிகள் 8, 10 மற்றும் 12-ம் வகுப்பு கல்வி கற்க வகுப்பறைக் கல்வி வசதி உள்ளது. சிறை ஆசிரியர்கள் மூலம் தினமும் மூன்று மணி நேரம் பாடம் சொல்லித்தரப்படுகிறது. இதன் மூலம் சிறையிலிருந்து கைதிகள் வெளியேறும்போது இக்கல்வி அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதோடு மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பையும் தருகிறது. அதேபோல் இசை கற்க முன்வருபவர்களை சிறை அதிகாரிகள் ஊக்குவிக்கின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் இசை கற்க சிறை கைதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும் சிறையிலிருந்து சுமார் 20 சிறை கைதிகள் மூலம் கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் பெட்ரோல் பங்க் செயல்பாட்டில் உள்ளது. பெட்ரோல் பம்புகளை இயக்கி வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவது, பண மேலாண்மை முதல் எரிபொருள் விநியோகம் வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் கைதிகள் கையாளுகின்றனர். கைதிகளுக்கு இத்தகைய முயற்சிக்கு அவர்களுக்கு தினசரி ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கைதிகளின் சீர்திருத்தத்திற்கு உதவுகிறது. மேலும் கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறை நெசவு பிரிவு உள்ளது. 109 விசைத்தறிகள் கொண்ட நெசவு அலகு உள்ளது. இதில் 200 தண்டனை கைதிகள் இரண்டு ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே சிறைக் கைதிகளின் மறுவாழ்வுக்காக சிறைசாலையை சீர்திருத்த சாலையாக மாற்ற “கூண்டுக்குள் வானம்” என்னும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கோவை மத்திய சிறைக் கைதிகளுக்கு திருப்பூர் புத்தக திருவிழா மூலம் 5 ஆயிரம் புத்தகங்கள் தானமாக கிடைத்துள்ளன.

இது குறித்து கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா கூறுகையில், "காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் பூஜாரி வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டரின் உதவியால் சிறைவாசிகளுக்கு புத்தகம் தானம் செய்வதற்கான “கூண்டுக்குள் வானம்” என்னும் புத்தக தான மேடை அமைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று பொதுமக்கள் புத்தக தானம் வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது. கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம், கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் மூலம் இந்நிகழ்வு தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்களால் சிறைவாசிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையை சீர்திருத்த சாலையாக மாற்றும் இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை மத்திய சிறைச்சாலையில் ஏற்கெனவே 4 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. இதுதவிர வாரந்தோறும் 100 புத்தகங்கள் மாவட்ட நூலகத்தில் இருந்து சுழற்சி முறையில் பெறப்பட்டு வருகின்றன. தற்போது சிறைக் கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கிலும் புத்தக தானம் பெற “கூண்டுக்குள் வானம் ” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பெட்ரோல் பங்கில் பொதுமக்கள் சிறைக்கைதிகளுக்கு புத்தகங்களை தானமாக வழங்கலாம். புத்தகங்களை விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் படிக்கின்றனர். இது அவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துக்கின்றது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in