நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக, கடந்த மே 19-ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம் என கூறி, அதற்கான கால அவகாசமும் வழங்கியது. அந்த அவகாசம் அக்டோபர் 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, வந்த அறிவிப்பில், இனி ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் கடந்த சில தினங்களாக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏராளமானோர் குவிந்தனர். சிலர் 300 அல்லது 400 ரூபாய் கமிஷனுக்காக பெற்றுக்கொண்டு வேறொருவருக்காக 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஏஜெண்டுகள் மூலம் இவ்வாறு பணம் மாற்றப்படுவதாகவும் தகவல் காட்டு தீ போல் பரவியது.
இந்த தகவலால் ஆடிப்போன மத்திய விசாரணை அமைப்புகளும், ஒடிசா மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரும் உடனடியாக களத்தில் இறங்கினர். வரிசையில் நின்று பணத்தை மாற்றுபவர்கள் உண்மையானவர்கள்தானா அல்லது வேறு யாருக்காவது பணத்தை மாற்றித் தருகிறார்களா என்று விசாரித்தனர். ஒருவர் ஒரு நேரத்தில் அதிகபட்சம் பத்து நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்ற நிலையில், வரிசையில் நின்றிருந்த அனைவருமே சரியாக 10 நோட்டுக்கள் மட்டுமே வைத்திருந்தனர். இது அதிகாரிகளின் சந்தேகத்தை அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ரூ.300 அல்லது ரூ.400 என கமிஷன் பெற்றுக் கொண்டு வேறு ஒருவருக்காக பணத்தை அவர்கள் மாற்றித் தருவது தெரியவந்தது. இதுகுறித்து, சிலரை அதிகாரிகள் விசாரித்த போது அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டதோடு, குடும்ப வறுமை காரணமாக இந்த வேலையை செய்வதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து, போலீஸார் கமிஷனுக்காக ரூபாய் நோட்டுக்களை மாற்றுபவர்கள் யாருக்காக மாற்றுகிறார்கள் என்பதை கண்டறிந்து அவர்களுடைய தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து ஆர்பிஐ மண்டல இயக்குநர் எஸ்.பி.மொஹந்தி கூறும்போது, வரிசையில் நிற்பவர்களின் விவரங்கள், ஆதார் அட்டை, சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து வைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், மத்திய விசாரணை அமைப்புகளுக்கும், ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கும் ஆர்பிஐ அதிகாரிகள் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.