கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடி நீர்; கிராமத்தை சூழ்ந்தது வெள்ளம்: ஊரை விட்டு வெளியேறும் மக்கள்

முதலைமேடு திட்டு கிராமத்தில் இருந்து வெளியேறும் மக்கள்
முதலைமேடு திட்டு கிராமத்தில் இருந்து வெளியேறும் மக்கள்

மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் 2 லட்சம் கன அடி நீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள கிராமங்களான முதலமேடுதிட்டு, சந்தப்படுகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் உடமைகளுடன் ஊரை விட்டு வெளியேறினர்.

மேட்டூரில் திறந்து விடப்படும் 2 லட்சம் கன அடி நீரும் முக்கொம்பில் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு கடலுக்கு அனுப்பப்படுகிறது. கொள்ளிடம் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பழையாறு என்ற இடத்தில் கடலில் கலக்கிறது. இன்று மதியம் நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 1.75 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் கொள்ளிடம் ஆற்றின் முத்து பகுதியில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு சற்று முன்பாக ஆற்றின் நடுவே வெள்ளமணல், முதலைமேடு திட்டு, சந்தப்படுகை, நாதல்படுகை உட்பட பல கிராமங்கள் உள்ளன. ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் அந்த கிராமங்களில் முற்றிலுமாக தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் உடமைகள் மற்றும் கால்நடைகளுடன் கிராமங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் அமைச்சர் மெய்யநாதன்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் அமைச்சர் மெய்யநாதன்

அந்த கிராமங்களில் உள்ளவர்களை வெளியேறுமாறு தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரித்து வருகின்றனர். எனினும் பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் பெண்கள் குழந்தைகளை மட்டும் வெளியேற்றிவிட்டு ஆண்கள் அங்கேயே தங்கியிருக்கின்றனர். அவர்களையும் வெளியேறுமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் ஆற்றின் கரை பலவீனமாக இருக்கும் அளக்குடி, குமாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று அவ்வபோது ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழக சுற்றுச்சூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் வந்து நிலைமையை ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in