
சென்னை துரைப்பாக்கத்தில் வேலைத் தேடி கொண்டிருக்கும் பெண்களை ஆசைவார்த்தக் கூறி பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்த 4 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 6 வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 9 பெண்களை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சார தொழில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்ததது.
இதனை அடுத்து விபச்சார தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இதில் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதை போலீஸார் கண்டுபிடித்தனர். அந்த இடத்திற்கு சாதாரண உடையில் சென்ற போலீஸார் நான்கு நபர்களை மடக்கிப் பிடித்தனர். அதில் இரண்டு நபர்கள் போலீஸாரைக் கண்டதும் ஓடி தலைமறைவாகி உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட இருந்த ஆறு வெளி மாநில பெண்கள் உட்பட ஒன்பது பெண்கள் மீட்கப்பட்டனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.