‘கோயிலை இடிக்கக் கூடாது’ - கொந்தளித்த பொதுமக்கள்

‘கோயிலை இடிக்கக் கூடாது’ - கொந்தளித்த பொதுமக்கள்

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மதுரை வீரன் கோயிலை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி ராசிபுரம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் கடந்த 2008-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைக்காக நில அளவீடு செய்யப்பட்டது.  அதன்படி  சாலையோரம் உள்ள மதுரை வீரன் கோயிலை அகற்றப்போவதாக நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

ஆனால், இந்தக் கோயில் கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் வழிபாட்டில் உள்ளதாகவும், நெடுஞ்சாலைத் துறை  தவறாக  நில அளவை செய்துள்ளதாகவும் மக்கள்  குற்றம்சாட்டுகிறார்கள். இந்த  நிலையில் பலரிடம் இது தொடர்பாக புகார் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரை வீரன் கோயிலை அகற்றக் கூடாது என வலியுறுத்தி இன்று ஏராளமான பொதுமக்கள் சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்தத் திடீர் சாலை மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீஸார், வருவாய்த் துறையினர்  மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பொதுமக்களை  சமாதானப்படுத்தி சாலை மறியலைக் கைவிடச் செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in