முதல்வர் அறிவித்த 1000 ரூபாய் எங்கே?: அதீத கனமழையால் பாதித்த பகுதி மக்கள் மறியல்

உமையாள்பதி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள்
உமையாள்பதி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்கள்

அதீத கனமழையால் பாதிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து பார்வையிட்ட  உமையாள்பதி கிராம மக்கள் முதல்வர் அறிவித்தபடி தங்களுக்கு ஆயிரம் ரூபாய் வந்து சேரவில்லை என்பதாலும், கூடுதல் நிவாரணம் கேட்டும் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் கடந்த 11-ம் தேதி இரவு  கொட்டித்தீர்த்த  அதீத  கனமழையில் குடியிருப்புகளைத் தண்ணீர் சூழ்ந்ததுடன், சுமார்  70ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. அத்துடன் தாலுகாவின் பெரும் பகுதி குடியிருப்புக்கள்  தண்ணீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அப்படி  பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான  உமையாள்பதி கிராமத்தை கடந்த 14-ம் தேதியன்று  தமிழக முதல்வர் ஸ்டாலின்  நேரில் வந்து பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.

மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள  அனைத்து மக்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பும்  இன்றைய தினமே வெளியானது.  ஆனால் மழை ஓய்ந்து 11 நாட்கள் கடந்த நிலையிலும், பாதிக்கப்பட்ட உமையாள்பதி கிராமத்தில் உள்ள 150 குடும்பங்களுக்கு எவ்வித நிவாரணமும்  இன்னமும் வழங்கப்படவில்லை. 

தமிழக  அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் போதாது. மேலும்  கூடுதல் நிவாரணம் உடனடியாக  வழங்க வேண்டும் என  வலியுறுத்தி  200-க்கும் மேற்பட்டோர் சீர்காழி மாதானம் சாலையில் இன்று   திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அவர்களின் போராட்டம் தொடர்ந்து நிலையில்  காவல் துறையினர்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே கலைந்து செல்வோம் என கூறி போராட்டத்தை தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் வந்து மக்களைச் சமாதானப்படுத்தினார் ஆனால், அவரிடமும் ஆவேசப்பட்ட மக்கள் சாலை மறியல் கைவிட மறுத்து போராட்டத்தை தொடர்கின்றனர்.  

இதனால் சீர்காழி மாதானம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in