ஊட்டியில் தொடரும் உறைபனி; தேயிலை செடிகள் பாதிக்கும் அபாயம்; வீடுகளில் முடங்கிய மக்கள்

ஊட்டியில் தொடரும் உறைபனி; தேயிலை செடிகள் பாதிக்கும் அபாயம்; வீடுகளில் முடங்கிய மக்கள்

ஊட்டியில் நான்காவது நாளாக தொடரும் உறை பனிகாரணமாக தொடர்ந்து நான்கு  நாட்களாக  மக்கள் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் உறைபனி பெய்ய தொடங்கும். குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உறைபனியின் தாக்கம் மிக அதிகமாக காணப்படும். இச்சமயங்களில் புல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் ஐஸ் கட்டிகள் போன்று புல்வெளிகள் மற்றும் காய்கறி தோட்டங்களில் உறைபனி காணப்படும்.

ஆனால், இம்முறை டிசம்பர் மாதத்தில் சில நாட்கள் மழை பெய்த நிலையில் உறைபனியின்  தாக்கம் குறைந்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்த நிலையில் உறை பனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பனி கொட்டி வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 

அதேபோல் அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இங்குள்ள புல் மைதானங்கள் வெள்ளை கம்பளம் விரித்தார்போல்காட்சி அளிக்கிறது. ஊட்டியில் குதிரை பந்தய மைதானம், ரயில் நிலையம், தாவரவியல் பூங்காவில் இன்றும் உறைப்பனி உறைந்துகிடந்தது. 

தொடர்ந்து 4  நாட்களாக பனி விழும் நிலையில் ஊட்டியில் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. தேயிலை தோட்ட தொழிலாளர்கள், காய்கறி தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குளிரால் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

காலை நேரங்களில் அதிகபட்சமாக 24 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பம் உள்ளது. இதேபோன்று உறைபனி, இன்னும் சில நாட்கள் தொடர்ந்தால் தேயிலை செடிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உறைபனியால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆகியோர் வீடு மற்றும் விடுதி அறைகளிலேயே முடங்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in