பறிமுதல் லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டருக்கு அபராதம் : உயர் நீதிமன்றம் அதிரடி

பறிமுதல் லாரியை விடுவிக்க லஞ்சம்  கேட்ட இன்ஸ்பெக்டருக்கு அபராதம் : உயர் நீதிமன்றம் அதிரடி

மணல் கடத்திய லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளருக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த அடைக்கலம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்," எனக்குச் சொந்தமான லாரியை மணல் கடத்தியதாக கடந்த 2014-ம் ஆண்டில் போலீஸார் பறிமுதல் செய்தனர். அந்த லாரியை விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன். என் மனுவை விசாரித்த நீதிமன்றம், என்னிடம் அபராதமாக ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு லாரியை விடுவிக்க 2015-ல் உத்தரவிட்டது. அதன்படி அபராதத் தொகையை செலுத்திவிட்டேன்.

ஆனால், ரூ.50 லட்சம் கொடுத்தால் தான் லாரியை விடுவிப்போம் என பாளையங்கோட்டை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் சபாபதி தெரிவித்தார். நான் லஞ்சம் கொடுக்காததால் லாரியை விடுவிக்கவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத பாளை காவல் ஆய்வாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி முரளிசங்கர் இன்று பிறப்பித்த உத்தரவில், " நீதிமன்ற உத்தரவிட்டபடி மனுதாரர் அபராதம் செலுத்திய பிறகும், அவரது வாகனத்தை வழங்காதது அதிர்ச்சியாக உள்ளது. இதனால் காவல் ஆய்வாளர் சபாபதிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு நவ. 24-க்குள் காவல் ஆய்வாளர் வழங்க வேண்டும். மனுதாரரிடம் வாகனத்தை ஒப்படைக்க நெல்லை மாவட்ட 3-வது நீதித்துறை நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in