அதிக கட்டணம் வசூல்; பயணிகளிடம் கொடுக்கப்பட்ட பணம்: ஆம்னி பேருந்துகளை தெறிக்கவிட்ட அதிகாரிகள்

அதிக கட்டணம் வசூல்; பயணிகளிடம் கொடுக்கப்பட்ட பணம்: ஆம்னி பேருந்துகளை தெறிக்கவிட்ட அதிகாரிகள்

பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளில் அதிரடியாக சோதனை நடத்திய தமிழக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கூடுதல் கட்டணம் கொடுத்து பயணித்தவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு சார்பில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இந்த நிலையில் பண்டிகை முடிந்து பொதுமக்கள் திரும்பும் வசதியாக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை ஈடுபட்டு வருவதாக தமிழக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து அமைச்சர் சிவசங்கர் அண்மையில் கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகளில் திடீர் சோதனை நடத்தி பயணிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இதையடுத்து ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதைத்து அதிரடியாக உத்தரவிட்ட அமைச்சர், மேலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் பண்டிகை காலத்தை பயன்படுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளிடம் இருந்து 92 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து வந்த புகாரை அடுத்து சென்னை கோயம்பேடு மற்றும் போரூர் பகுதிகளில் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் வழக்கத்திற்கு மாறாக அதிக கட்டண வசூலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகள் மற்றும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த பிற மாநில ஆம்னி பேருந்துகளும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து விதிமுறைகளை மீறிய 49 ஆம்னி பேருந்துகளுக்கு 92 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் அளித்த 9 பயணிகளுக்கு 9,200 ரூபாய் திரும்ப கொடுக்கப்பட்டது. அதிக கட்டணம், விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வரும் 2-ம் தேதி வரை சோதனையை நடத்தப்படும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in