பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம்

நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் ஒரு ஆண் பயணி, ஒரு பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 30 லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.

விமானத்தில் மூத்த பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக, விமானத்தின் தலைமை விமானியின் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநர் இடைநீக்கம் செய்துள்ளார். மேலும், தனது கடமைகளை நிறைவேற்றத் தவறியதற்காக ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீர் கழித்த சம்பவத்திற்காக பயணி சங்கர் மிஸ்ரா மீது விமான நிறுவனம் நேற்று, நான்கு மாதங்கள் பறக்கத் தடை விதித்தது.

நவம்பர் 26ம் தேதி நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சங்கர் மிஸ்ரா, 70 வயது பெண் பயணி மீது சிறுநீர் கழித்துள்ளார். நவம்பர் 27 அன்று, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ஏர் இந்தியா குழுமத் தலைவருக்கு இந்த பயங்கரமான சம்பவம் குறித்து கடிதம் எழுதினார். அதனைத் தொடர்ந்து ஏர் இந்தியா ஜனவரி 4-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்தது. மேலும், இரு தரப்பும் சமாதானமாக சென்றுவிட்டதாக உணர்ந்ததால் காவல்துறையில் புகாரளிக்கவில்லை என்றும் ஏர் இந்தியா கூறியது.

ஜனவரி 6-ம் தேதி, ஏர் இந்தியாவின் கணக்கு மேலாளர், ஏர் இந்தியாவின் விமான சேவைகள் இயக்குநர் மற்றும் அந்த விமானத்தின் அனைத்து விமானிகள் மற்றும் கேபின் குழு உறுப்பினர்களுக்கும் ஏன் அமலாக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களின் ஒழுங்குமுறைக் கடமைகளைத் தவறவிட்டதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததுடன், பதில் அளிக்க இரண்டு வார கால அவகாசமும் வழங்கப்பட்டது. இதற்கு டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் இன்று காலை பதில் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in