பழநி கோயிலில் முடங்கியது இணையதளம்: மின் இழுவை ரயில் டிக்கெட்டிற்காக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பு

பழநி மின் இழுவை ரயில்
பழநி மின் இழுவை ரயில்

பழநி மலை கோயிலுக்குச் செல்லும் மின் இழுவை ரயிலில் பயணிப்பதற்கு டிக்கெட் வழங்கும் இணையதளம் முடங்கியதால் டிக்கெட் பெற முடியாமல் பக்தர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் எளிதாக மலைமீது சென்று சாமி தரிசனம் செய்வதற்காக படிப்பாதை, மின்இழுவை ரயில் மற்றும் ரோப்கார் போன்ற வசதிகள் உள்ளன. ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், மின்இழுவை ரயிலில் செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்
நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்

இந்நிலையில், இன்று காலை முதல் மின் இழுவை ரயிலில் செல்வதற்காக டிக்கெட் வழங்கும் இணையதளம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியதால், டிக்கெட் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் டிக்கெட் பெற்று கோயிலுக்குச் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

இச்சூழலில், தற்காலிகமாக கைகளில் டிக்கெட் கொடுக்கப்பட்டு பக்தர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இணையதள முடக்கம் காரணமாக கடந்த வாரமும் பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, அதிகளவு பக்தர்கள் வருகை தரும் பழநி கோயிலில் டிக்கெட் வழங்க பயன்படும் இணையதள சேவையை முறையாக பராமரித்து, அடிக்கடி ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in