பேராசிரியரின் சான்றிதழை கொடுக்காவிட்டால் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும்: சென்னை பல்கலைக்கு உத்தரவு

பேராசிரியரின் சான்றிதழை கொடுக்காவிட்டால் 10 லட்சம் இழப்பீடு வழங்கவும்: சென்னை பல்கலைக்கு உத்தரவு

விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் திரும்ப ஒப்படைக்காவிட்டால் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்திற்கு  உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி துறையில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுப்ரமணியன், 2016-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு மூத்த விஞ்ஞானிக்கான விருதுக்கு கடந்த 2017-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். தமக்கு விருது வழங்கப்படாத நிலையில் தமது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் மீது எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில், தமது அசல் சான்றிதழ்களை திரும்ப அளிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர். சுப்ரமணியன் முன்பு விசாரணைக்கு வந்த போது, சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில், மனுதாரரின் அசல் சான்றிதழ்களை  பதிவாளர் அலுவலகம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி மனுதாரரின் விண்ணப்பம் மற்றும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட  நிலையில், அசல் சான்றிதழ்கள் மட்டும் தங்களுக்கு கிடைக்க பெறவில்லை எனப் பதிவாளர் கூறுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மனுதாரரின் அசல் சான்றிதழ்களை எட்டு வாரங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒப்படைக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மனுதாரருக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் எனவும் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு உத்தரவிட்டார்.

மேலும்,  அசல் சான்றிதழ்களை காணாமல் போயிருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, சான்றிதழ் காணாமல் போனதற்கு காரணமானவர்களிடமிருந்து மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டிய 10 லட்சம் ரூபாய்  தொகையை வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in