‘காஷ்மீர் பகை பிரதேசமல்ல... தேசபக்தியைத் திணிக்க முடியாது!’ - மெஹ்பூபா முஃப்தி கண்டனம்

மெஹ்பூபா முஃப்தி
மெஹ்பூபா முஃப்தி

சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘ஹர் கர் திரங்கா’ எனும் பெயரில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுமாறு மக்களிடம் பிரச்சாரம் செய்யும் பணி நாடெங்கும் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தெற்கு காஷ்மீரில், இந்தப் பிரச்சாரத்துக்கு 20 ரூபாய் நன்கொடை வழங்காத கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியான அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதையடுத்து, “தேசபக்தி என்பது இயல்பாக வருவது; அதைத் திணிக்க முடியாது” என்று காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி கூறியிருக்கிறார்.

‘ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்’ எனும் பெயரில், மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின்படி, நாட்டின் குடிமக்கள் அனைவரின் மனதிலும் தேசபக்தியை ஊட்டவும், தேசியக் கொடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஒன்றியப் பிரதேசமான காஷ்மீரிலும் இதற்கான முன்னெடுப்புகளை அரசும் பாஜகவினரும் எடுத்திருக்கின்றனர். இன்று (ஜூலை 25) ஸ்ரீநகரின் லால் செளக் பகுதியில், 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் கலந்துகொள்ளும் தேசியக் கொடி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்தப் பேரணியைத் தொடங்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. லால் செளக் பகுதியிலிருந்து கார்கில் நினைவிடத்துக்கு இரு சக்கர வாகனங்களில் பாஜகவினர் ஊர்வலமாகச் செல்லவிருக்கின்றனர்.

இதற்கிடையே, தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தேசியக் கொடி பிரச்சாரத்துக்காக அங்குள்ள கடைக்காரர்களிடம் கட்டாய வசூல் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியான ஒரு காணொலி வைரலானது.

“கடைக்காரர்கள் அனைவரும், தாங்கள் எந்த அலுவலகத்தில் லைசென்ஸ் பெற்றனரோ அந்த அலுவலகத்துக்கு திங்கள் கிழமை (இன்று) காலை 11 மணிக்குச் சென்று 20 ரூபாயை டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனந்தநாக் மாவட்டத்தின் பிஜ்பிஹாரா நகர எல்லைக்குள் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும். இது ‘ஹர் கர் திரங்கா’ திட்டத்துக்கானது. செலுத்தத் தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்டோவில் அறிவிப்பு செய்யப்படும் காட்சி அந்தக் காணொலியில் பதிவாகியிருக்கிறது.

இதற்கிடையே அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், ‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்துக்காக ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் தலா 20 ரூபாய் வசூலிக்குமாறு அம்மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி முகமது ஷெரீஃப் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த உத்தரவு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. எனினும், பல பள்ளிகளில் அந்தத் தொகை வசூலிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், காஷ்மீர் அரசு நிர்வாகத்தின் இந்நடவடிக்கைகளை மெஹ்பூபா முஃப்தி கடுமையாகக் கண்டித்திருக்கிறார். “தேசியக் கொடி ஏற்றுவதற்காகப் பணம் தருமாறு மாணவர்கள், கடைக்காரர்கள், அரசு ஊழியர்களை காஷ்மீர் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதைப் பார்க்கும்போது, ஏதோ காஷ்மீர் ஒரு பகை பிரதேசம் போலவும், அதைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என்றும் அரசு நிர்வாகம் கருதுவதுபோல தெரிகிறது. தேசபக்தி என்பது இயல்பாக வருவது. அதைத் திணிக்க முடியாது” என்று நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியிருக்கிறார்.

எனினும், “தேசியக் கொடி பிரச்சாரம் ஒரு தன்னார்வ இயக்கம். அதில் எந்தவிதமனா நிர்ப்பந்தமும் வற்புறுத்தலும் இல்லை” என்று காஷ்மீர் டிவிஷனல் ஆணையர் பி.கே.போலே விளக்கமளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in