‘முகக்கவசம் அணியாத பயணிகளை முதல் வேலையாக வெளியேற்றுங்கள்!’

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அதிரடி
‘முகக்கவசம் அணியாத பயணிகளை முதல் வேலையாக வெளியேற்றுங்கள்!’

இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், விமான நிலையங்களில் கரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதால், அதைப் பின்பற்றாத பயணிகளை விமானம் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டிருக்கிறது. அவர்கள் கட்டுப்பாடில்லாமல் நடந்துகொள்ளும் பயணிகளாக நடத்தப்படுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறது.

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற மறுக்கும் பயணிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜூன் 3-ல் உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த அறிவிப்பை டிஜிசிஏ வெளியிட்டிருக்கிறது.

பெருந்தொற்று இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்று சுட்டிக்காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம், நினைவூட்டல் செய்த பின்னரும் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற பயணிகள் மறுத்தால், சுகாதாரத் துறை அல்லது டிஜிசிஏ விதிமுறைகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.

அவர்களைப் பலவந்தமாக அகற்றலாம், விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்கலாம் அல்லது அடுத்தகட்ட நடவடிக்கைக்காகப் பாதுகாப்பு அமைப்புகளிடம் அந்தப் பயணிகளை ஒப்படைக்கலாம் என்றும் அந்த உத்தரவில் நீதிமன்றம் தெரிவித்தது.

அதன் அடிப்படையில் டிஜிசிஏ தீவிரமாகக் களமிறங்கியிருக்கிறது. விமானப் பயணிகள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிசெய்யும் பணி மத்திய தொழில் துறைப் பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in