இவர்களுக்காக பயணிகள் காத்திருக்கிறார்கள்!

அரசுப் பேருந்தில் அசத்தல் சேவை செய்யும் தம்பதி
பேருந்தில் கிரி - தாரா
பேருந்தில் கிரி - தாரா

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் ஓடும் அந்த அரசுப்பேருந்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. வழக்கமான அரசுப் பேருந்துக்கான இலக்கணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு, கண்காணிப்புக் கேமரா, அலங்கார பொம்மைகள் என உல்லாச ரதம்போல் பயணிகளை வசீகரம் செய்கிறது அந்தப் பேருந்து.

அப்படி என்ன சிறப்பு இந்தப் பேருந்துக்கு மட்டும்? இந்தப் பேருந்தை ஓட்டும் ஓட்டுநர் கிரி கோபிநாத்தும், வழிநடத்தும் நடத்துநர் தாராவும் தம்பதியர் என்பது முதல் சிறப்பு. பணியில் இவர்கள் செய்யும் கூடுதல் சேவையைப் பாராட்டி அண்மையில் கேரள உயர் நீதிமன்றமே பாராட்டியிருப்பது அடுத்த சிறப்பு!

பேருந்தின் உள்பகுதி
பேருந்தின் உள்பகுதி

ஆலப்புழா - கருநாகப்பள்ளி வழித்தடத்தில் தினமும் பயணிக்கிறது இந்தப் பேருந்து. இந்த வழித்தடத்தில் போக்குவரத்து வசதிக்குப் பஞ்சமில்லை என்றாலும் இந்தப் பேருந்துக்காக காத்திருந்து பயணிக்கிறார்கள் மக்கள். மனதுக்கு இதமாக பாடல் ஒலிக்கும் இந்தப் பேருந்தில், பொருள்கள் ஏதேனும் தொலைந்து போனால் கண்டுபிடிக்கவும், திருட்டைத் தவிர்க்கவும் சிசிடிவி கேமரா வசதியும் உண்டு. மழலைகளை மகிழ்விக்க பேருந்து முழுவதும் பலூன்களாலும் பந்துகளாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இத்தனை போதாதா... இந்தப் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்க?

பேருந்து பற்றி விசாரிக்கத் தொடங்கியதுமே முகத்தில் மகிழ்ச்சி ததும்ப பேசத் துவங்கினார் கிரி கோபிநாத். “நானும், தாராவும் கடந்த 2000-ல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தோம். அப்போது எங்களுக்குள் உண்டான நட்பு காதலாக மலர்ந்தது. ஆனால், ஜாதக பொருத்தம் இல்லை என்று சொல்லி எங்கள் திருமணத்துக்கு வீட்டில் மறுத்துவிட்டார்கள்.

இந்த நிலையில், 2007-ல் அரசு போக்குவரத்துக் கழகத்தில் எனக்கு டிரைவர் வேலையும், 2010-ல் தாராவுக்கு கண்டக்டர் வேலையும் கிடைத்தது. கடந்த பத்து வருடங்களாக இருவரும் ஒரே டெப்போவில் தான் வேலை செய்கிறோம். ஆனால், வீட்டார் எதிர்ப்பால் இருபது வருடங்கள் காத்திருந்து ரெண்டு வருடத்துக்கு முன்பு தான் இருவரும் திருமணம் செய்துகொண்டோம்” என்று முன்கதையைச் சொல்லி நிறுத்தினார் கிரி

சிசிடிவி கேமரா
சிசிடிவி கேமரா

தொடர்ந்து பேசினார் கிரி. “இந்தப் பேருந்தில் ஏகப்பட்ட புதுமைகளை நாங்கள் செய்துள்ளோம். விபத்தைத் தவிர்க்க பேருந்துக்கு வெளியிலும் சிசிடிவி கேமராக்களை வைத்திருக்கிறோம். இதன் காட்சிகள் டிரைவருக்கு அருகிலேயே டிஸ்பிளே ஆகும் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படுது. முக்கியமாக, தினமும் பேருந்தை நாங்களே சுத்தம் செய்துவிடுவோம்” என்று கிரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறிக்கிறார் நடத்துநர் தாரா.

“அரசுப் பேருந்தை நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் அலங்காரம் செய்யமுடியாது. ஆனா நாங்க, கேரள அரசு போகுவரத்துக் கழகத்திடம் உரிய அனுமதி வாங்கி இதையெல்லாம் ஸ்பெஷலா செஞ்சோம். இதுக்கெல்லாம் எங்களோட சொந்தப் பணத்தையே செலவு செய்தோம்’’ என்றார் தாரா.

“பேருந்துப் பயணம் இருக்கட்டும்... உங்களது காதல் பயணத்தைப் பற்றி கொஞ்சம் பேசுவோமே” என்றதும் வெட்கம் ததும்பும் புன்னகையுடன் தொடர்ந்தார் தாரா.

ஸ்பீக்கர் வசதி
ஸ்பீக்கர் வசதி

”எங்கள் காதலை கல்யாணத்தில் முடிப்பதற்காக இருபது வருடங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். ஜாதகம் எங்களது திருமணத்துக்கு குறுக்கே நின்றாலும் பெற்றோரை மீறி திருமணம் செய்யவும் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதனால் காதலர்களாகவே நாட்களை நகர்த்தினோம். இருவரும் ஒரே டெப்போவில் ஒரே பேருந்தில் வேலை செய்ததும் எங்களது காதலுக்கு தடையில்லாமல் போலாம் ரைட் சொன்னது.

2019-ல் கிரியின் அப்பா இறந்துவிட்டார். அவர் தான் எங்கள் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவர். அவருக்கு மதிப்புக் கொடுத்து அவர் உயிரோடு இருக்கும் வரை நாங்கள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர் இறந்து ஓராண்டு கழித்து லாக் டவுண் சமயத்தில் தான் நாங்கள் கரம்பிடித்தோம். அப்போது எனக்கு 40 வயது; கிரிக்கு 44 வயது” என்று புன்னகைக்கிறார் தாரா.

பெற்றோர் சம்மதமெல்லாம் பெரிதாக மதிக்கப்படாத இந்தக் காலத்தில், பெற்றோரின் வார்த்தைக்கும் மதிப்பளித்து அதற்காக தங்களது காதலையும் தொலைத்துவிடாமல் பொத்திப் பாதுகாத்திருக்கிறது இந்த ஜோடி.

அதையும்கூட காதல் வார்த்தைகளில் சொல்கிறார் தாரா. “ஒன்றில்லை... இரண்டில்லை. முழுதாக இருபது வருடங்கள் காத்திருந்திருக்கிறோம். அதனால் தானோ என்னவோ இனி இவர்களுக்குள் பிரிவே இருக்கக்கூடாது என தெய்வம் எங்களை ஆசீர்வதித்திருக்கிறது. இல்லாவிட்டால், வீட்டில் மட்டுமில்லாது பணியிடத்திலும் ஒன்றாகப் பயணிக்கும் வாய்ப்பு எங்களுக்கு இப்படி அமையுமா?” எனச் சொல்லும்போதே குரல் கம்முகிறது தாராவுக்கு.

இந்தப் பேருந்தில் பயணிகள் தங்களுக்கு விருப்பமான பாடலை போடச் சொல்லி கேட்பதையும் வழக்கமாக வைத்துள்ளனர். வயதானவர்கள் பேருந்தில் அதிகம் பேர் இருந்தால் 1985-களில் வெளியான மம்மூட்டி, மோகன்லாலின் பாடல்களையும், இளம் தலைகள் அதிகம் தெரிந்தால் ஃபகத் ஃபாசில் தொடங்கி காளிதாஸ் வரை இன்றைய யூத்கள் விரும்பும் பாடல்களையும் ஓடவிட்டு அசத்துகிறார் கிரி.

அதுகுறித்து நம்மிடம் பேசிய கிரி, “பயணிகளிடம் கூடுதல் சினேகம் காட்டுவோம். பேருந்துக்குள் ஆட்டோமெட்டிக் ஏர் ஃபிரஷ்னர் வைத்திருக்கிறோம். அதனால் எப்போதுமே பேருந்துக்குள் கமகம வாசனை இருக்கும். இந்த ரூட்டில் அடிக்கடி சின்னக் குழந்தைகள் பயணிப்பார்கள். அவர்களை மகிழ்விக்கவே பார்பி உள்ளிட்ட ஏராளமான பொம்மைகளைத் தொங்கவிட்டிருக்கிறோம். அந்தக் குழந்தைகள் ஆசைப்பட்டு பொம்மை கேட்டால் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்து விடுவோம். பயணத்தின் போது விளையாடிவிட்டு, போகும்போது திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் நிபந்தனையாக வைத்துள்ளோம். பயணிகளுக்கு ஏதாவது ஆபத்து உள்ளிட்ட அசௌகரியங்கள் ஏதும் ஏற்பட்டால் அதுகுறித்து டிரைவருக்கு உடனே தகவல் சொல்ல வசதியாக நான்கு சீட்டுக்கு ஒரு எமர்ஜென்சி ஸ்விட்ச் வீதம் வைத்துள்ளோம். மொத்தத்தில், இந்தப் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு அரசுப் பேருந்தில் பயணிப்பது போன்ற எண்ணம் வரவே வராது. சுற்றுலாப் பேருந்தில் பயணிப்பதைப் போல்தான் உணர்வார்கள்” என்றார்.

கேரளத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஏகப்பட்ட கோரிக்கைகள் அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், “ஹரிபாடு டெப்போவில் ஒரு பேருந்தில் கிரி - தாரா என்ற தம்பதி பணி செய்கின்றனர். அவர்கள் காலையிலேயே டெப்போவுக்கு வந்து தங்கள் பேருந்தை சுத்தம்செய்து, அலங்கரித்து பெரிய சேவை செய்கிறார்கள். அதேபோல் அனைவரும் தங்கள் பணியை நேசிக்கவேண்டும்” என பாராட்டினார். நீதிபதி அப்படி மனமுவந்து பாராட்டிய பிறகுதான் கிரியும் தாராவும் ஒட்டு மொத்த கேரளத்தின் பேசப்படும் மனிதர்களானார்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள். அது நியாயமான ஒன்றுதான். ஆனால் அதற்கு முன்னதாக, தாங்கள் பணி செய்யும் இடத்தை எப்படி போற்ற வேண்டும், பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக்கொள்ள வேண்டும். கணவன் - மனைவியான கிரியும் தாராவும் அதை நன்றாகவே கற்றிருக்கிறார்கள்!

படங்கள் உதவி: வள்ளிகாடன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in