அபரிமிதமான வேளாண் வருமானங்கள்: வரி ஏய்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடங்குமா?

அபரிமிதமான வேளாண் வருமானங்கள்: வரி ஏய்ப்பைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடங்குமா?

வருமான வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்து தடுக்க, விவசாயத்தில் பெரிய தொகை வருமானமாகக் கிடைத்ததாக அரசிடம் தெரிவிக்கும் கணக்குகளை மேலும் கவனமாக ஆராய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் கணக்குக் குழு (பிஏசி) மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் வலியுறுத்தியிருக்கிறது. 2020-21 நிதியாண்டில் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்தவர்களில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர், விவசாயம் மூலமே தங்களுடைய வருமானத்தில் பெரும்பகுதி கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர். அவர்களில் சுமார் 60,000 பேர், ஓராண்டில் 10 லட்ச ரூபாய்க்கும் மேல் வருமானம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தகவல்கள் சரியா, உண்மையா என்று நேரடி வரிகள் வாரியம் உரிய வகையில் சரிபார்த்து மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுக் கணக்குக் குழு கவலை தெரிவிக்கிறது. வேறு வகையில் பணம் ஈட்டுகிறவர்கள்கூட அதை ‘வேளாண்மையில் கிடைத்தது’ என்று கணக்கு காட்டி வரியை ஏய்க்கிறார்கள். உண்மையான விவசாயிகளோ விவசாயத்தில் வருமானமே இல்லை, லாபத்துக்கு எங்கே வழியிருக்கிறது என்று வியக்கிறார்கள். மாதச் சம்பளக்காரர்கள் வருவாயை ஈட்டும்போதே நிறுவனங்களாலும் மத்திய, மாநில அரசுகளாலும் வரிப்பிடித்தம் செய்யப்பட்டு வரியைச் செலுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்தக் குறையைச் சரி செய்தால் அரசுக்கு வரி வருவாய் பெருகும் என்பதுடன் சமூகத்தில் வருத்தப்பட்டு உழைத்து சம்பாதிக்கிறவர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துவதும், மற்றவர்கள் சட்டங்களும் சலுகைகளும் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பு செய்வதுமான சமூக அவலம் தவிர்க்கப்படும்.

விவசாயத்தில் ஓராண்டில் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் கிடைத்ததாக 21,55,368 பேர் வருமான வரி கணக்குப் படிவத்தில் குறிப்பிட்டுள்ளனர். அவர்களில் முதல் கட்டமாக 59,707 பேரின் கணக்குகளைச் சரிபார்க்க நேரடி வரிகள் வாரியம் தேர்வு செய்தது. வருமான வரித்துறையில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக அதிலும் 3,379 பேரின் கணக்குகள் மட்டுமே ஆராயப்பட்டன. இதை நேரடி வரிகள் வாரியத் தலைவரே பொதுக் கணக்குக் குழு முன்னிலையில் ஆஜராகி கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது தெரிவித்திருக்கிறார்.

10 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைப்பதாகத் தெரிவித்தவர்கள் அனைவருமே ஒரே தொகுப்பில் சேர்க்கப்பட்டு கணக்குகள் சரிபார்க்கப்பட்டுள்ளன. அப்படியில்லாமல் 10 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்கள், 50 லட்சத்துக்கும் மேல் பெற்றவர்கள், ஒரு கோடிக்கும் மேல் வருவாய் பெற்றவர்கள் என்று பிரித்து உயர் வருவாய் பிரிவினரை ஒருவர் விடாமல் ஆராய்ந்திருக்க வேண்டும் என்று பொதுக் கணக்குக் குழு சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தக் குழுவுக்கு இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரிதான் தலைவர்.

ஆனால் பெரு விவசாயிகளிலேயே ஏராளமானோர் இந்தக் கணக்கையும் தாக்கல் செய்வதில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். விழிப்புணர்வு இல்லாததால் தாக்கல் செய்யாதவர்கள், கணக்கு தாக்கல் செய்யத் தொடங்கினால் தொடர்ந்து கணக்கு காட்டச் சொல்லி துன்புறுத்துவார்கள் என்ற அதிகபட்ச விழிப்புணர்வு காரணமாகத் தொடர்ந்து தவிர்ப்பவர்கள், தாக்கல் செய்யும் நடைமுறைகள் தெரியாததால் தாக்கல் செய்யாதவர்கள், அடிக்கடி வருமான வரி அலுவலகத்துக்கு அலைய வேண்டியிருக்கும் என்ற அச்சத்தால் தவிர்ப்பவர்கள் என்று பல வகைகளில் விவசாயிகள் உள்ளனர். சாதாரண விளைநிலங்கள் தவிர தோட்டப் பயிர்கள், பணப் பயிர்கள், ஏலம் – மிளகு- தேயிலை போன்ற மலைத்தோட்டப் பயிர்கள் என்று உயர் வருமான விவசாயிகள் பலதரப்பட்டவர்கள்.

தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பட்டயக் கணக்கர்கள், சொந்தமாக வியாபாரம் செய்கிறவர்கள், அரசு உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர் என்று பலரும் இப்போது விவசாயத்திலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் அல்லது விவசாய நிலங்களை வாங்கி வைத்துக்கொள்கின்றனர். எனவே பொதுக் கணக்குக் குழுவின் யோசனைகள் அவசியம் பரிசீலிக்கப்பட வேண்டும்.

நாடு முழுவதும் வருமான வரி வசூலிக்கும் மத்திய அரசு நாட்டில் நிலங்களின் அளவு, வகைமை, விளையும் பயிர்கள், அவற்றின் சந்தை மதிப்பு, சாகுபடிச் செலவு என்று பலவற்றையும் துல்லியமாகப் பெற்று தரவுகளைத் திரட்ட வேண்டும். இது வருமான வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கு மட்டுமல்லாமல் நாட்டின் தொழில் – விவசாயக் கொள்கைகளுக்கான தரவுகளை நொடியில் பெற்று திட்டவட்டமாக முடிவுகளை எடுக்கவும் உதவும். அது மட்டுமல்லாமல் விவசாய வருமானம் என்ற பெயரில் அந்நியச் செலாவணி மோசடிகள் மூலம் பணம் திரட்டுகிறவர்களையும் அரசு வரி நிர்வாகத்தின் கண்களுக்கே தெரியாமல் வெளிநாடுகளிலிருந்து பணத்தைக் கொண்டுவந்து தரகு அடிப்படையில் இந்தியாவில் அவர்களுடைய குடும்பத்தவர்களுக்கு இந்திய ரூபாயில் தந்து வரி ஏய்ப்பதுடன் தேச விரோதச் செயலிலும் ஈடுபடுகிறவர்களையும் கண்டுபிடிக்க உதவும்.

பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் மொத்தமுள்ள 136 முதன்மை வருமான வரி ஆணையர்களுக்கும் தகவல் தெரிவித்து அவரவர் ஆட்சி எல்லைகளில் எத்தனை பேர் விவசாய வருமானம் என்று அதிகம் காட்டியிருக்கிறார்கள் என்று கேட்டது. 26 முதன்மை ஆணையர்கள் மட்டுமே அதற்குப் பதில் அளித்துள்ளனர். அதிக வருமானத்தைக் காட்டியவர்கள் கணக்கையே பெரும்பாலான ஆணையர்கள் மறைத்துவிட்டனர். இந்த நிலை நீடித்தால் வருமான வரி ஆணையம் முறையாகத்தான் செயல்படுகிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு எப்படி ஏற்படும். நேரடி வரி வசூலில் மேலும் நிதி திரட்ட உள்ள வாய்ப்புகளைப் பெருக்கினால் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும். மொத்த உற்பத்தி மதிப்பில் வரி வருவாயின் பங்கு அதிகரிக்கும். இனி வரும் காலங்களிலாவது உயர் வருவாய்ப் பிரிவினர் மீது அரசின் கவனம் மேலும் கூர்மைப்படட்டும்.

Related Stories

No stories found.