காவலரின் துப்பாக்கியைப் பறித்து சுடத் தொடங்கிய கொலையாளி: கார் பார்க்கிங் தகராறில் இளைஞரைக் கொன்றவர் அடாவடி!

காவலரின் துப்பாக்கியைப் பறித்து சுடத் தொடங்கிய கொலையாளி: கார் பார்க்கிங் தகராறில் இளைஞரைக் கொன்றவர் அடாவடி!

டெல்லி அருகே, கார் பார்க்கிங் தகராறில் இளைஞரைக் கொன்ற நபர், காவலரின் துப்பாக்கியைப் பறித்து போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.25), காஜியாபாத் நகர் அருகே உள்ள ஜாவ்லி நகரின் டீலா மோர் பகுதியைச் சேர்ந்த வருண்(35), தனது நண்பர்களுடன் உணவகம் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். அப்போது தனது காரை, சிரஞ்சீவி சர்மா என்பவரின் காருக்கு அருகே அவர் நிறுத்தியிருந்தார். சிரஞ்சீவி சர்மாவின் கார் கதவைத் திறக்க முடியாத அளவுக்கு மிக அருகில் தனது காரை அவர் நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வருணுக்கும் சிரஞ்சீவி சர்மாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சிரஞ்சீவி சர்மாவும் அவரது கூட்டாளிகளும் செங்கல் கற்களைக் கொண்டு வருணைக் கடுமையாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் டெல்லியில் உள்ள ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

டெல்லி காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற கன்வர் பால் என்பவரின் மகனான வருண், கார் பார்க்கிங் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருண் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகின. டெல்லியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக, கன்வர் பால் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, சிரஞ்சீவி சர்மாவையும் அவரது கூட்டாளிகளையும் தேடிவந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து காரில் தப்பிய சிரஞ்சீவி சர்மா ஃபாரூக் நகரில் பதுங்கியிருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்றபோது, துணை ஆய்வாளர் சுபாஷின் துப்பாக்கியைப் பறித்துக்கொண்ட சிரஞ்சீவி சர்மா, போலீஸாரை நோக்கிச் சுடத் தொடங்கினார். இதையடுத்து போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் சிரஞ்சீவி சர்மாவின் காலில் குண்டு பாய்ந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது ஏற்கெனவே பல குற்றவியல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அவரைக் கைதுசெய்திருக்கும் போலீஸார், அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அவரது கூட்டாளிகளைக் கைதுசெய்ய விரைந்திருக்கின்றனர்.

இதற்கிடையே, இந்தச் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கன்வர் பால், தனது மகன் தாக்கப்பட்டபோது அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்றவோ, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவோ முயற்சிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.

சம்பவம் நடந்த இடத்தில், காரில் அமர்ந்து மது அருந்துவதைப் பலர் வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்திருக்கிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உணவுகளை வழங்கும் உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறைக் கண்காணிப்பாளர் முனிராஜ் உறுதியளித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in