திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் அர்விந்த் கேஜ்ரிவால்... கண்ணீர் ததும்ப வரவேற்ற பெற்றோர்!

பெற்றோரிடம் ஆசி வாங்கிய அர்விந்த் கேஜ்ரிவால்.
பெற்றோரிடம் ஆசி வாங்கிய அர்விந்த் கேஜ்ரிவால்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அவரது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

அமலாக்கத் துறையால்  கைது செய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால்
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால்

இதற்கிடையே, அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 29, 30, மே 3, 7 ஆகிய தேதிகளில் வாதங்கள் நடைபெற்றன.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற அமலாக்கத் துறையின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். மக்களவை தேர்தலையொட்டி அவருக்கு ஜூன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அதனைத் தொடர்ந்து கேஜ்ரிவால் நேற்று இரவு திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார், அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சிக்கொடி மற்றும் சின்னமான துடைப்பத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.

இதன்பின் வீடு சென்ற அர்விந்த் கேஜ்ரிவாலை பட்டாசு வெடித்து அவரது குடும்பத்தினர் உற்சாகமாக வரவேற்றனர். அர்விந்த் கேஜ்ரிவால் பெற்றோர், மனைவி சுனிதா, மகள் ஹர்ஷிதா ஆகியோர் இனிப்பு கொடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர். தனது பெற்றோர் காலில் விழுந்து அர்விந்த் கேஜ்ரிவால் ஆசி பெற்றார். அப்போது அவரது பெற்றோர் கண்கலங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in