`என் மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும்'- எதிர்க்கட்சி தலைவரிடம் கனியாமூர் பள்ளி மாணவியின் பெற்றோர் கண்ணீர்

`என் மகளின் மரணத்துக்கு நீதி வேண்டும்'- எதிர்க்கட்சி தலைவரிடம் கனியாமூர் பள்ளி மாணவியின் பெற்றோர் கண்ணீர்

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர், எனது மகளின் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க பெற்றோர் கூறினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதன் பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியை மாணவியின் பெற்றோர் சந்தித்து மனு கொடுத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெற்றோர், "என்னுடைய மகள் மரணம் குறித்து ஏற்கெனவே முதல்வரை சந்தித்து மனு கொடுத்து இருக்கிறோம். மற்றத் தலைவர்களையும் சந்தித்து மனு கொடுக்க இருப்பதாக ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு மனுவிலும் எனது மகளுக்கு நியாயம் கேட்டு தான் மனு கொடுத்து கொண்டிருக்கிறாேம். இன்று காலையில் சட்டத்துறை அமைச்சரை பார்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அப்போது, என் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் நியாயம் வேண்டும் என்றும் கேட்டோம்.

சட்டப்பூர்வமாக என்ன செய்ய முடியுமோ அதை நாங்கள் செய்து தருகிறோம் என்று அமைச்சர் வாக்குறுதி கொடுத்தார். எந்த தலைவரையும் சந்திக்கும் திட்டம் இல்லை. தலைவர்களின் அப்பாயின்மென்ட் கிடைத்தால் அவர்களை சந்தித்து பேசுவோம். மற்ற தலைவர்களிடம் கொடுத்த மனுவைத்தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிடம் கொடுத்தோம். நாங்கள் ஏற்கெனவே கொடுத்த மனு அனைத்து ஊடகத்துக்கும் சென்றிருக்கிறது. அதைத்தான் நகலெடுத்து எல்லா தலைவர்களுக்கும் கொடுத்து வருகிறோம். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று நீதிபதி சொல்லி இருக்கிறார். அது தீர்ப்பு கிடையாது. அதனால் தான் நாங்கள் மேல் மேல்முறையீட்டுக்கு செல்கிறோம். நாங்கள் எந்த விசாரணையும் கேட்கவில்லை. சிபிசிஐடி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அரசே இந்த வழக்கை எடுத்து நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம்.

சிபிஐ விசாரணை தேவையில்லை. சிபிசிஐடி விசாரணையே போதுமானது. சிபிசிஐடியின் அறிக்கை இதுவரைக்கும் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் மர்மமாக வைத்துள்ளார்கள். இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது அது தெரியவரும். ஜிப்மர் அறிக்கை இன்னும் எங்களிடம் தரப்படவில்லை. என் மகளின் பிரேத பரிசோதனை அறிக்கை முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. அந்த அறிக்கையை விசாரணைக்கு பிறகு சிபிசிஐடி தெரியப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். என் மகள் மரண வழக்கில் ஜாமீனில் வெளிவந்துள்ள பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று தான் நாங்கள் மேல்முறையீடு செய்ய உள்ளோம். அதை தமிழக அரசே எடுத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்" என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in