கள்ளக்காதலனுடன் வாழ மகள் மறுப்பு; பெற்றோர் கழுத்து அறுத்து கொலை: தவறான உறவால் நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட ஆறுமுகம்- மஞ்சுளா தம்பதி
கொலை செய்யப்பட்ட ஆறுமுகம்- மஞ்சுளா தம்பதி

தன்னுடன் வாழ்க்கை நடத்த வர மறுத்த கள்ளக்காதலியின் பெற்றோரை கள்ளக்காதலன் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. தப்பி ஓடிய கள்ளக்காதலனை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை குரோம்பேட்டை அடுத்த ஜமீன் ராயப்பேட்டை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(59). இவருக்கு திருமணமாகி மஞ்சுளா(50) என்ற மனைவியும், இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகளுக்கு திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றனர். மேலும் பூ வியாபாரம் செய்து வந்த ஆறுமுகம் தனது மனைவியுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் குடியேறியுள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தனது தாய் மஞ்சுளா வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரது மூத்த மகள் வசந்தி நேற்று இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது தந்தை ஆறுமுகம், தாய் மஞ்சுளா இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் வசந்தி இது குறித்து சிட்லப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த போலீஸார், ஆறுமுகம், மஞ்சுளா தம்பதியின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கொலையான தம்பதியின் மூத்த மகள் வசந்தி ஏற்கெனவே திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து, மோசஸ் என்பவருடன் தகாத உறவில் இருந்துவந்தது தெரியவந்தது. மேலும் வசந்தியின் கள்ளக்காதலன் மோசஸ் தினமும் குடித்துவிட்டு வந்து வசந்தியை கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனால் அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் வசந்தி. இதனால் ஆத்திரமடைந்த மோசஸ் அடிக்கடி வசந்தி வீட்டிற்கு சென்று தன்னுடன் வந்து வாழ்க்கை நடத்துமாறு வற்புறுத்தி வந்ததுடன் நீ என்னுடன் வாழ வரவில்லையென்றால் உனது தாய், தந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் வசந்தி இதனை பொருட்படுத்தாமல் இருந்ததால் ஆத்திரமடைந்த மோசஸ், தனது நண்பர் ஆறுமுகம் என்பவருடன் நேற்று வசந்தியின் தாய் வீட்டிற்கு சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆறுமுகம், மஞ்சுளா ஆகியோரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. தப்பி ஓடிய மோசஸ், ஆறுமுகம் ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மகளின் தகாத உறவால் தாய், தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in