5 கார்களில் அடியாட்களுடன் வந்து திடீர் தாக்குதல்: காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோரால் பரபரப்பு

5  கார்களில் அடியாட்களுடன் வந்து திடீர் தாக்குதல்: காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோரால் பரபரப்பு

ஆந்திராவில் காதல் திருமணம் செய்த மகளை சினிமா பாணியில் பெற்றோர் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம் சந்திரகிரி அருகே உள்ள மோகன் ரெட்டி காலனியில் வசிப்பவர் மோகன் கிருஷ்ணா. குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷ்மா. இவர்கள் இருவரும் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்த போது இருவருக்கும் ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறியது.

இதனால் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சுஷ்மாவின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுஷ்மா தற்போது மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.,

இதற்கிடையில் மோகன் கிருஷ்ணாவின் பெற்றோர் சம்மதத்துடன் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தங்கள் மகளை மோகன் கிருஷ்ணா கடத்தியதாக போலீஸில் சுஷ்மாவின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை அறிந்த போலீஸார், சுஷ்மாவின் பெற்றோரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று மோகன் கிருஷ்ணா வீட்டிற்கு ஐந்து கார்களில் சுஷ்மாவின் பெற்றோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் மோகன் கிருஷ்ணா வீட்டில் இருந்த பொருட்களை இரும்பு கம்பியால் அடித்து நொறுக்கினர். மேலும் ஜன்னல், கதவு உள்ளிட்ட அத்தனைப் பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். அப்படியும் ஆத்திரம் தீராத அவர்கள், மோகன் கிருஷ்ணா உள்ளிட்ட அவர்களின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பலர் காயமடைந்தனர். பின்னர் சுஷ்மாவை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவரது பெற்றோர் இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து சந்திரகிரி காவல் நிலையத்திற்கு மோகன் கிருஷ்ணா தகவல் அளித்தார். அத்துடன் தன் குடும்பத்திற்கு பாதுகாப்பு மட்டுமின்றி நீதி வழங்க வேண்டும் என்று திருப்பதி எஸ்.பியிடம் நேரில் சென்று மோகன் கிருஷ்ணா புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க குண்டூர் போலீஸாருக்கு எஸ்.பி அறிவுறுத்தியுள்ளார். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in