ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர்; பின்னர் ஒரே புடவையில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை: பெற்றோர் எதிர்ப்பால் நடந்த சோகம்

ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர்; பின்னர் ஒரே புடவையில் காதல் ஜோடி  தூக்கிட்டு தற்கொலை: பெற்றோர் எதிர்ப்பால் நடந்த சோகம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (29). எம்.காம் பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக சென்னை தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை, அண்ணா தெருவில் வாடகை வீட்டில் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வந்தார். அத்துடன் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ஜெயராமன் உத்திரமேரூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பி.டெக் பட்டதாரியான யுவராணிக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பீர்க்கன்காரணை பகுதியில் உள்ள காதலன் ஜெயராமனை சந்திப்பதற்கு அவரது வீட்டிற்கு யுவராணி நேற்று வந்தார். அப்போது ஜெயராமனின் தாய் மற்றும் சகோதரர் வேலைக்குச் சென்று விட்டனர். இந்த நிலையில் இருவரும் ஆன்லைன் மூலம் மதிய உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

இரவு வேலை முடிந்து விட்டு வந்த ஜெயராமனின் தாய் வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஜெயராமனும், அவரது காதலி யுவராணியும் ஒரே புடவையில் தூக்கிட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பீர்க்கங்காரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக பீர்க்கங்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதால் யுவராணி பெற்றோர் அவரது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் யுவராணிக்கு திருமணம் செய்ய வரன் தேடி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த யுவராணி, காதலன் ஜெயராமனுடன் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in