பப்பன் சிங் மரணம்: பொதுமுடக்கத்தின்போது தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பிவைத்த தொழிலதிபர்

பப்பன் சிங் மரணம்: பொதுமுடக்கத்தின்போது தொழிலாளர்களை விமானத்தில் அனுப்பிவைத்த தொழிலதிபர்

பப்பன் சிங் கெலாட் எனும் பெயரை நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கரோனா பொதுமுடக்கத்தின்போது தனது காளான் பண்ணையில் பணியாற்றிய ஊழியர்கள் வீடு திரும்ப விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து பத்திரமாக வழியனுப்பிவைத்தவர் அவர். தொழிலாளர்கள் மீது அந்த அளவுக்குப் பரிவு காட்டிய பப்பன் சிங், டெல்லியில் உள்ள அவரது வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

55 வயதாகும் பப்பன் சிங் கெலாட், டெல்லியில் காளான் பண்ணை வைத்து நடத்திவந்தார். 2020 மார்ச் மாதம் கரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடி பொதுமுடக்கத்தை அறிவித்தபோது, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் பணிபுரிந்துவந்த ஏராளமான தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊர் செல்லும் நிலை ஏற்பட்டது.

அப்போது, பப்பன் சிங் கெலாட் பிஹாரைச் சேர்ந்த தனது ஊழியர்களும் தொழிலாளர்களும் பத்திரமாக ஊர் திரும்பும் வகையில், விமான டிக்கெட்களை இலவசமாக வழங்கினார். இது நாடு முழுவதும் பேசுபொருளானது. பலரும் அவரது பெருந்தன்மையான செயலைப் பாராட்டினர்.

அவரது நற்செயல் அத்துடன் முடிந்துவிடவில்லை. பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு தொழில்கள் மீண்டும் நடைபெறத் தொடங்கியபோது, தனது ஊழியர்களும் தொழிலாளர்களும் டெல்லிக்குத் திரும்ப, மீண்டும் அவர்களுக்கு இலவச விமான டிக்கெட்களை வழங்கினார். மீண்டும் அவருக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இயல்பாகவே தொழிலாளர்களை மரியாதையாகவும் நட்புடனும் நடத்தக்கூடியவர் பப்பன் சிங். இத்தனை நற்குணங்கள் கொண்டிருந்த அவர், டெல்லி அலிப்பூரில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார்.

அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நிலை மோசமானதால் தற்கொலை செய்துகொள்வதாக அவர் கடிதம் எழுதிவைத்திருப்பதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in