லாபத்தை மிஞ்சிய லஞ்சப் பேரம்: கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர்!

லாபத்தை மிஞ்சிய லஞ்சப் பேரம்: கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி செயலாளர்!

ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் டெண்டர் எடுத்து பணி செய்த ஒப்பந்ததாருக்கு அதற்குரிய தொகையை வழங்குவதற்கு அவருக்குக் கிடைக்கும் லாபத் தொகையை விட அதிகளவில் லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது குளத்தூர் ஊராட்சி. கோட்டயத்தைச் சேர்ந்த பீட்டர் என்பவர் இந்த ஊராட்சியில் மூன்று பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்திருந்தார். மொத்தம் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகளுக்கான தொகையை ஒப்பந்ததாரருக்கு விடுவிக்க ஊராட்சி செயலாளர் சந்தோஷ்குமார் 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மொத்தத் தொகையில் மூன்றில் ஒருபங்கை ஊராட்சி செயலாளரே லஞ்சமாகக் கேட்டதும், பீட்டர் அதிர்ந்து போனார். அதற்கு முன்பணமாக 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டார். உடனே இது தொடர்பாக பீட்டர் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் தெரிவித்தார். அவர்கள் ரசாயனம் தடவிய 5000 ரூபாயை பீட்டரிடம் கொடுத்து அனுப்பிவைத்தனர்.

பீட்டர், அந்தப் பணத்தைக் கொடுத்ததும் ஊராட்சி செயலாளர் சந்தோஷ் அதை வாங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சந்தோஷ்குமாரைக் கைது செய்தனர். ஊராட்சி செயலாளர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in