பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு: கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி நடவடிக்கை

ஊராட்சி தலைவருக்கு நோட்டீஸ்
சோழவாண்டிபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர்
சோழவாண்டிபுரம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்டவற்றில்  முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளர் மற்றும்  பணிப்பார்வையாளர்கள்  உட்பட மொத்தம் நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியம்  சோழவாண்டிபுரம் கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் உள்ளிட்ட இதர திட்டப்பணிகளில் கடந்த சில  ஆண்டுகளாக தொடர்ந்து ஊழல் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷரவன்குமாருக்கு குற்றச்சாட்டுக்கள் வந்தன. அதையடுத்து அதிகாரிகள் மூலம் அந்த கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் தொடர்முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அந்த ஊராட்சி செயலாளர் ஆ.பெருமாள், பணி பார்வையாளர்கள் கலைவாணி,  கோவிந்தசாமி மற்றும் கண்ணன் ஆகிய நான்கு பேரையும்  அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஊராட்சியில் செலவுச் சீட்டுகள் இல்லாமல் செலவுகள் செய்யப்பட்டது மற்றும் ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பது  சம்பந்தமாக ஊராட்சி  தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்டத்தில் ஊழல் முறைகேடுகளில்  ஈடுபடும் மற்றும் முறைகேடுகளுக்கு துணை போகும்  அரசு ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in