கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் ஊராட்சிமன்ற உறுப்பினர்

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் ஊராட்சிமன்ற உறுப்பினர்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சில்லரை புரவு ஊராட்சியில் இரண்டாவது வார்டு உறுப்பினராக இருப்பவர் மகேஸ்வரி. இவர்மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஏலச்சீட்டு நடத்திவிட்டு பணம் தராமல் ஏமாற்றியதாக தென்காசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் சில்லரை புரவு ஊராட்சியில் ஏராளமான நிதி மோசடி நடப்பதாகவும், அதனைத் தட்டிக் கேட்டதால் ஊராட்சி நிர்வாகத்தினரின் தூண்டுதலில் தன் மேல் பொய் வழக்குப் போட்டிருப்பதாகவும் மகேஸ்வரி குற்றம் சாட்டிவந்தார்.

இந்நிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று தன் இருமகள், ஒரு மகனையும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துவந்தார் மகேஸ்வரி. அப்போது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து மேலே வேகமாக ஊற்றினார். இதை கவனித்த அங்கு பாதுகாப்பிற்கு நின்ற போலீஸார் உடனே குடங்களில் தண்ணீர் கொண்டுவந்து மகேஸ்வரியின் மேலே ஊற்றினர். அப்போது மகேஸ்வரி, “தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ”எனத் தெரிவித்தார். அவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என சமரசமாகச் சொல்லி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர் காவலர்கள்.

ஊராட்சிமன்ற உறுப்பினர் ஆட்சியர் அலுவலகத்தில் வந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in