காலி குடங்களுடன் போராடியது பொதுமக்கள் அல்ல, ஊராட்சி மன்ற தலைவர்கள்: காரணம் இதுதான்!

காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள்
காலிக் குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள்

பொதுவாக கிராமங்களில் குடிநீர் இல்லை என்றால் முறையாக குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களே காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 42 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அளக்குடி, முதலைமேடு, மகேந்திரப்பள்ளி, காட்டூர், புளியந்துறை ஆகிய ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாகவே குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை.

இந்த கிராமங்களில் உள்ள முப்பதாயிரம் லிட்டர் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஒருநாள் கூட முழுமையாக நீர் நிரம்புவது இல்லையாம். அதனால் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே இந்த ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடிகிறது என்று ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். அதனால் இந்த ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்களும், அந்தந்த ஊராட்சிகளின் உறுப்பினர்களோடு கையில் காலிக் குடங்களுடன் இன்று கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர் அமுதாராணி, ஊராட்சி மன்ற தலைவர்களை சமாதானப்படுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் அழைத்துச் சென்றார். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணனை சந்தித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் இது குறித்து மனு அளித்தனர்.

அவர்களிடம் விரைவில் குடிநீர் பிரச்சினை சரி செய்யப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். அவரிடம் குறிப்பிட்ட நாட்களுக்குள் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஊராட்சி மன்ற தலைவர்கள் எச்சரிக்கை விடுத்து திரும்பினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in